கடலூர்:
கடலோர மாவட்டங்களில் பயிர் செய்யப்படும் சவுக்கு மரம் விலை சரிவால் உற்பத்தி பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 45 ஆயிரத்து 699 எக்டேர் பரப்பில் சவுக்கு பயிர் செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் கடலோர பகுதிகளில் 10 ஆயிரத்து 820 எக்டேர் பரப்பில் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. மிக நீண்ட கடற்பரப்பு உள்ளதால் மற்ற மாவட்டங்களை விட இங்கு அதிகளவில் சவுக்கு பயிர் செய்யப்படுகிறது. புஞ்சை நிலப் பகுதிகளில் கூலி ஆட்கள் கிடைக்காததால் ஏராளமான விவசாயிகள் சவுக்கு பயிர் செய்து லாபம் ஈட்டி வந்தனர்.நான்கு ஆண்டுகள் வளர்ந்த சவுக்கு மரங்கள் ஒரு டன் 1,800 ரூபாய் விலையும், கம்பம் டன் ஒன்று 2,800 ரூபாய், உருட்டுக் கட்டை 2,500 ரூபாயும் விலை போகிறது.
அதேபோல் ஜெயங் கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பல பகுதிகளில் தைல மரங்கள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக வறட்சியான நிலங்களில் தைல மரங்கள் பெருமளவு பயிர் செய்யப்படுகின்றன. இவ்விரு மரங்களும் கர்நாடகாவில் உள்ள அரியாறு, ஆந்திராவில் உள்ள "ஏபிஆர்' ஆகிய காகித ஆலைக்கு அனுப் பப்பட்டு வந்தன.மொத்தத்தில் நாளொன்றுக்கு 5,000 டன் மரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இதனால் வெளி மாநில காகித ஆலை பிரதிநிதிகள் நல்ல விலை கொடுத்து மரங்களை கொள்முதல் செய்தனர். இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2008ம் ஆண்டு வெளி மாநிலத்திற்கு சவுக்கு மற்றும் தைல மரங்கள் அனுப்புவதற்கு தடை போட்டது.இதனால் மாநிலத்திற்குள் உள்ள டி.என்.பி.எல்., சேஷசாயி காகித ஆலைகள், விறகு, தனியார் தொழிற் கூடங்கள் என மொத்தத்தில் 3,000 டன் மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது. இதன் விளைவாக நாளொன்றுக்கு 2,000 டன் தேக்கம் ஏற்பட்டது.
இதனால் சவுக்கு, தைல மரங்கள் விலை ஒரு டன்னுக்கு 100 ரூபாய் முதல் 200 வரை குறைந்தது. இதனால் சவுக்கு பயிர் செய்த விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். சவுக்கு மரங்கள் பயிர் செய்வதற்கும் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைந்தது. கடந்த 2007ம் ஆண்டு 10 லட்சம் டன் சவுக்கு கன்றுகள் விற்பனை செய்யப்பட்டது. 2008ல் 6 லட்சம் டன்னாக குறைந்தது. தற்போது நடவு சீசன் துவங்கி உள்ளது. பல லட்சம் சவுக்கு கன்றுகள் நர்சரியில் தயாராக இருந்தும், விவசாயிகளிடையே ஆர்வம் குறைவால் நாற்று வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் சவுக்கு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக