நெய்வேலி:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஊழியர்களுக்கும் அவர்களைச் சார்ந்து வாழ்பவர்களுக்கும் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச கலர் டி.வி. உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் மறுக்கப்படுவதால் அவர்கள் விரக்தியில் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் சுமார் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நெய்வேலியில் 20 ஆயிரம் என்எல்சி ஊழியர்களின் குடும்பத்தினரும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினரும், அவர்களைச் சார்ந்து வாழும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் உள்ளனர். நெய்வேலி நகரத்தின் மின்சாரம், குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் என்எல்சி நிர்வாகமே செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை குறிஞ்சிப்பாடி தொகுதியில் அங்கம் வகித்த நெய்வேலி நகரம், தற்போது தொகுதி மறு சீரமைப்பு காரணமாக புதிய நெய்வேலி தொகுதியாக உருவெடுத்துள்ளது. என்எல்சியின் சுற்றுப்புற மேம்பாட்டு நிதி மூலமாக அருகில் 10 கி.மீ. தொலைவுக்குள் உள்ள கிராமங்களின் சாலை வசதி, பள்ளிக் கட்டடம், நூலகம், பாலம், ஆழ்துளைக் கிணறு அமைப்பது, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி போன்ற பணிகளை செய்து கொடுக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகத்தின் பணியையும் என்எல்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் என்எல்சியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் (2,490 மெகாவாட்) சரி பாதி தமிழகத்துக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் நெய்வேலியில் உள்ள 3 காவல் நிலையங்களுக்கும் வாகன வசதி, இலவச மின்சாரம், |40 லட்சம் செலவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் என பல சலுகைகளையும் என்எல்சி செய்து கொடுத்துள்ளது.
ந்நிலையில் பல கோணங்களிலும் தமிழக அரசுக்கு துணையாக விளங்கும் என்எல்சி நிறுவனத்தின் ஊழியர்கள் அரசின் நலத்திட்ட உதவிகோரி மாவட்ட நிர்வாகத்தை அணுகினால், "நலத்திட்ட உதவிகள் நெய்வேலிக்கு இல்லை' என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். வாக்களிக்கும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட நிர்வாகம் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர் என்எல்சி ஊழியர்கள்.
ஆட்சியர் விளக்கம்:
தற்போது கிராம பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கலர் டி.வி. வழங்கியிருக்கிறோம். அடுத்து நகராட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் போது நெய்வேலி டவுன்ஷிப் பகுதிக்கும் வழங்கப்படும் என ஆட்சியர் சீதாராமன் தெரிவித்தார். ஆனால், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் நகராட்சிப் பகுதிகளில் இலவச கேஸ் அடுப்பு மற்றும் இலவச கலர் டி.வி. ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக