கடலூர்:
மருத்துவச் சிகிச்சைக்காக பிரேமானந்தாவின் பரோல் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி விராலிமலையில் ஆசிரமம் நடத்தியபோது கொலை, கற்பழிப்பு வழக்குகளில் சிக்கிய, பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அவர் கடந்த 16 ஆண்டுகளாக கடலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். சிறைத்தண்டனை காலத்திலும் பிரேமானந்தா அடிக்கடி பரோலில் ஆசிரமத்துக்குச் சென்று வருகிறார். அவரது சீடர்கள் பலரும் சிறைச்சாலைக்கு வந்து அவரை வணங்கிச் செல்கிறார்கள்.
இந்த நிலையில் பிரேமானந்தாவுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கண்பார்வைக் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற விரும்பியதால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி பரோலில் செல்ல அனுமதி கோரினார். அவருக்கு ஒருமாதம் பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனவே கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செவ்வாய்க்கிழமை ஒருமாத பரோல் காலம் முடிவடைந்தது. அவருக்கு மேலும் மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதால், பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க, சிறைத்துறை மூலமாக தமிழக அரசிடம் பிரேமானந்தா மனு அளித்து இருந்தார். தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை பெறும் வகையில் அவருக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீடிக்கப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக