உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 12, 2010

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்

            ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

            டிசம்பரில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம் எனவும் அமைச்சரவைக்கு அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

              இது தொடர்பாக முடிவெடுக்க பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை கூடியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என இந்தக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான இறுதி முடிவை அமைச்சரவை விரைவில் அறிவிக்கும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சர்கள் குழுவில் பிரணாப் முகர்ஜி தவிர, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் பரூக் அப்துல்லா, வேளாண் அமைச்சர் சரத் பவார், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

               ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடந்த நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் கடும் அமளியில் ஈடுபட்டன. அதன் பின்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அமைச்சர்கள் குழு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது.  ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இப் பிரச்னை தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் சம்மதம் தெரிவித்தன. பெரும்பாலான கட்சிகள் சம்மதம் தெரிவித்த நிலையில், புதன்கிழமை கூடிய அமைச்சர்கள் குழு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior