கடலூர்:
பெரிய கங்கணாங்குப்பம் -சுப உப்பலவாடி தார் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது.
கடலூர் - புதுச்சேரி மெயின் ரோடில் கங்கணாங்குப்பத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது சுப உப்பலவாடி கிராமம். கடலோர பகுதியான இக் கிராமத்தில் உள்ள மீனவர்கள் தாம் பிடிக்கும் மீன்களை எளிதாக மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதற்காக வசதியாக கடந்த 1997ம் ஆண்டு நபார்டு திட்டத்தில் 44 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை போடப்பட்டது. இந்த சாலைப் பணி நடக்கும்போதே சிறப்பு ஆலோசனை அதிகாரியாக பதவி வகித்து வந்த அஷாக் வரதன் ஷெட்டி திடீரென ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து குறைகள் களையப்பட்டு தரமான சாலை போடப்பட்டது.
இந்த சாலை வழியாக ஒரே ஒரு தடம் எண் 21 அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. எவ்வித சேதாரமுமின்றி 9 ஆண்டு காலமாக சிறந்த நிலையிலேயே இருந்தது. இருப்பினும் அந்த சாலையை புதுப்பிக்க கிராம சாலைகள் திட்டத்தில் 27 லட்ச ரூபாய் மதிப்பில் சாலை போட முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலைபோடும் பணி நடந்தது.
நல்ல நிலையில் உள்ள சாலையின் மீதே புதிய தார் சாலை போடுவதால் மேலும் தரமாக இருக்கும் என கிராம மக்கள் கருதினர். ஆனால் நடந்தது வேறு. ஏற்கனவே தரமாக இருந்த சாலையை ஜேசிபி இயந்திரத்தின் உதவியால் 2 கி.மீ., தூரத்தை அடியோடு பெயர்த்து எடுத்தனர். இதற்கு கிராம மக்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்பு இருந்த சாலையை விட தரமான சாலையை போட்டுத் தருவதாக ஒப்பந்ததாரர், அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து கிராம மக்கள் சமாதானம் அடைந்தனர்.கிராம மக்கள் எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் மெல்லிய கணத் தில் தரமற்ற சாலை போடப் பட்டது.
கனரக வாகனங்களைவிட இலகு ரக வாகனங்கள் அதிகம் செல்லும் இச்சாலை மிக குறுகிய காலத்திலேயே குண்டும் குழியுமானது. அதிக வளைவுகள் உள்ள சாலையாக இருப்பதால் ஆங்காங்கே ஜல்லி பெயர்ந்து கிராவல் தெரிய ஆரம்பித்தது. இரண்டு கி.மீ., தொலைவிற்கிடையே உச்சிமேடு, சரஸ்வதி நகர் உள்ளிட்ட பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதனால் அதிகமாக டூ வீலர்கள், சைக்கிள்கள் பயன்படுத்தும் கிராம மக்கள், மாணவ மாணவியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எதிர்வரும் மழைக் காலத்தில் மேலும் பல இடங்களில் பள்ளங்கள் உண்டாவது தவிர்க்க முடியாது. எனவே குண்டும் குழியுமான இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக