உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 12, 2010

முந்திரியிலிருந்து மதிப்பு கூட்டிய பொருள்கள் தயாரிப்பு



சிதம்பரம்:
 
            நமது நாட்டில் முந்திரி அதிகளவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது முந்திரியிலிருந்து பல புதிய மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் முந்திரி பயிரிடும் வியாபாரிகளுக்கு கூடுதல் லாபத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
 
            கேரள மாநில முந்திரி வளர்ச்சி நிறுவனம், பல புதுமையான முந்திரி மதிப்பு கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு அதிகளவு வணிகம், கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் லாபத்தை ஈட்டி வருகிறது. |20 (20 கிராம்) முதல் |600 (1 கிலோ) வரையிலான மதிப்பு கூட்டப்பட்ட முந்திரிப் பொருள்கள் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. 
 
 முந்திரி சூப் கலவை: 
 
                 முந்திரி தூள், காய வைக்கப்பட்ட காய்கறிகள், மிளகு, உப்பு, சர்க்கரை கொண்ட முந்திரி சூப் கலவை நுகர்வோரின் தேவைக்கேற்ப உடன்டியாக தயார் செய்து பயன்படுத்தலாம். சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள முந்திரி சூப் கலவை கேரள நுகர்வோர் சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
 
முந்திரி விட்டா: 
 
             முந்திரி விட்டா சிறிய குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு சத்துள்ள பானமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பால், சர்க்கரை, தானிய மாவுடன் கலந்த கலவையுடன் முந்திரியும் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பாக்கெட்களில் விற்பனை செய்யப்படும் முந்திரி விட்டா, குளிர் பானங்களை போல் பருகும் வகையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
 
முந்திரி பவுடர்: 
 
            முந்திரியை நன்றாக உலர்த்தி அரைத்து பவுடராக்கி, மக்காச் சோள மாவுடன் கலந்து முந்திரி பவுடர் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. நல்ல சுவையாக உள்ள முந்திரி பவுடர் பாயசம், முந்திரி தேவைப்படும் சைவ மற்றும் அசைவ தயாரிப்புகள், ஐஸ்கிரீம் தயாரிப்புகளில் அதிகளவில் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முந்திரி பவுடர் பயன்படுத்துவதால் சமையலில் முந்திரி அரைத்து பயன்படுத்தும் தேவை இல்லாமலும், குறைந்த நேரத்தில் சமையல் பணிகளை வீடுகளிலும், பெரிய விருந்துகளிலும் செய்யவும் முடிகிறது.
 
வாசனை முந்திரி துகள்கள்: 
 
            நன்றாக காய வைக்கப்பட்ட முந்திரி, உப்பு மற்றும் மிளகு கலந்து நேரடியாக உண்ணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்படாத சுவையான பொழுது போக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது.
 
இது குறித்து அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: 
 
               முந்திரியில் புதிய, மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு அதிக லாபம் ஈட்டப்படுகிறது. தொழில் முனைவோர் புதிய தொழில்நுட்பங்களைப் பெற்று பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக வங்கிகளுடன் இணைந்து முந்திரியில் புதிய மதிப்பு கூட்டிய பொருள்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior