கடலூர்:
கடலூரில் போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றித் திரிந்த 18 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் சிறை பிடித்தனர். மாட்டின் உரிமையாளர்களுக்கு தலா 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடலூர் நகரின் பிரதான சாலைகளான லாரன்ஸ் ரோடு, குத்தூசி குருசாமி சாலை, பாரதி சாலை, நேதாஜி சாலைகளிலும், பஸ் நிலையத்திலும் மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்று வந்துக் கொண்டிருந்தன. இதனால் போக்குவரத்து பாதிக் கப்பட்டதோடு, அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்ததை தொடர்ந்து, போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சேர்மன் தங்கராச, கமிஷனர் குமார் உத்தரவிட்டனர். அதன்பேரில் நகராட்சி ஆய்வாளர்கள் சக்திவேல், பத்மநாபன், ரங்கராஜ் ஆகியோர் நேற்று அதிரடியாக கடலூர் பஸ் நிலையம் மற்றும் லாரன்ஸ் ரோட்டில் சுற்றித் திரிந்த 18 மாடுகளை பிடித்து, மஞ்சக்குப்பம் பாபு கலையரங்கில் கட்டி வைத்துள்ளனர். மாடுகளை தேடி வந்த அதன் உரிமையாளர்களிடம் அபராதத் தொகை 250 ரூபாய் செலுத்திவிட்டு மாடுகளை ஓட்டிச் செல்லுமாறும், இனி வரும் காலங்களில் மாடுகளை வீடுகளில் கட்டி வளர்க்க அறிவுறுத்தினர். இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும் என்பதே மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக