உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

டாஸ்மாக் கடைகளை நடத்தும் அரசு, மருந்து கடைகளையும் நடத்த வேண்டும் : எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்


Latest indian and world political news information












                   டாஸ்மாக் கடைகளை நடத்தும் தமிழக அரசு, தாலுகா வாரியாக மருந்து கடைகளை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்றும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கீழ் கடைகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், காலாவதியான மருந்து விவகார பிரச்னை, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் மீது நடந்த விவாதம்:

சேகர்பாபு-அ.தி.மு.க., : 

                 தினமும் மூட்டை, மூட்டையாக போலி மருந்துகளும், காலாவதியான மருந்துகளும் கைப்பற்றப்படுகின்றன. உயிர்காக்க வேண்டிய மருந்துகளே, காவு வாங்குகின்ற கொடுமையும் நடக்கிறது. போலி மருந்து மற்றும் காலாவதி மருந்துப் பிரச்னை இங்கு உச்சத்தில் இருக்கும்போது, நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சர், பென்னாகரம் தேர்தல் பிரசாரத்தில் இருந்தார்.தரமற்ற மருந்துகளை விற்ற விவகாரத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. போலி மருந்துகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட மருந்து பட்டியலில் உள்ளவற்றில், 300க்கும் மேற்பட்ட மருந்துகள் புழக்கத்தில் இருக்கின்றன.இந்தப் பிரச்னையில் போலீசார் விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது. சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்து, விசாரணையில் தன்னையும் உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

பீட்டர் அல்போன்ஸ்-காங்கிரஸ்: 

               மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமையை வழங்கினால்தான், மற்ற உரிமைகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், பாதுகாப்பான வாழ்வுரிமை கேள்விக்குறியாகி உள்ளது.போலி மற்றும் காலாவதி மருந்து விற்பனை மூலம் 500 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த பிறகே, அவரைப் பற்றிய உண்மை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 12 ஆண்டுகளாக இந்த மோசடி நடந்துள்ளது. எனவே, இதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.ஏழை மக்களுக்காக அரசு தரும் மருந்துகளும், ஊசிகளும் எங்கேயோ போய் கடைச்சரக்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக நம்மை நாமே பார்த்து அவமானப்பட்டு நிற்கிறோம். சென்னையில் மட்டும் 5,000 மருந்து கடைகள் உள்ளன. மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள் உள்ளன.இவற்றை பார்வையிட 50 மருந்தக ஆய்வாளர்கள் போதாது. ஒரு தாலுகாவிற்கு ஒரு மருந்தக ஆய்வாளரை நியமிக்க வேண்டும். 2008ம் ஆண்டு, 'சின்கோவிட்' என்ற மருந்து நிறுவனம், மீனாட்சி சுந்தரம் மீது அப்போதே புகார் கொடுத்துள்ளது.அந்த வழக்கு மீண்டும், 'ரீ-ஓப்பன்' செய்யப்படும் என, போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். அப்படியெனில், அப்போது அந்த வழக்கை, 'குளோஸ்' செய்தது யார்? குற்றவாளி தப்பித்தது எப்படி? இதையெல்லாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனை அளவில் அரசே மருந்து கடைகளை திறக்க வேண்டும்.தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது மோசடி வழக்கு மட்டும் பதிவு செய்யாமல், 307,302 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். போலியான மருந்துகளை விற்பனை செய்திருப்பது, மக்களை கொலை செய்ய முயற்சித்ததற்கு சமம். எனவே, இந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மிகக் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

வேல்முருகன்-பா.ம.க., : 

                       பல்வேறு கட்சி உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபை குழு, பல இடங்களில் மருந்து நிறுவனங்களை ஆய்வு செய்து, விதிமுறைகளின்படி இயங்காத அவற்றை மூடுவதற்கு, நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், அந்நிறுவனங்கள் ஐகோர்ட்டுக்கு செல்கிறார்கள்.வழக்கு வரும்போது, சட்டசபை குழு எடுத்த நடவடிக்கைகளை விவரமாக தெரிவிக்க லாயக்கற்றவர்களாகத் தான், அரசு வக்கீல்கள் இருக்கின்றனர். இதனால், மூடப்பட்ட 10, 15 நாட்களில் மீண்டும் திறந்து விடுகின்றனர்.தற்போது கைதாகியுள்ளவர்களை ஜாமீன் எடுப்பதற்காக, வக்கீல்கள் போட்டி போடுகின்றனர். மக்களின் உயிருடன் விளையாடியவர்களுக்கு, ஆதரவாக செயல்படுவதில்லை என வக்கீல்கள் முடிவெடுக்க வேண்டும். அவர்களுக்காக ஆஜராகி வாதாடக் கூடாது. மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை நடத்தும் அரசு, மருந்து கடைகளையும் நடத்த வேண்டும்.

நன்மாறன்-மார்க்சிஸ்ட்: 

             கடும் தண்டனை வழங்கி, எதிர்காலத்தில் இப்படி ஒரு சிந்தனை யாருக்கும் எழக்கூடாத அளவிற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குணசேகரன்-இந்திய கம்யூனிஸ்ட்:  

              ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும்.

சதர்ன் திருமலைக்குமார்-ம.தி.மு.க.,: 

                   மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அரசே மருந்து கடைகளை நடத்த வேண்டும்.இவ்வாறு எம்.எல்.ஏ.,க்கள் பேசினர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior