முசிறியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட, 267 பிளஸ் 2 விடைத்தாள் மாயமான சம்பவம் குறித்து, தபால்துறை அதிகாரிகளிடம், தனிப்படை போலீசர் நேற்று விசாரணை நடத்தினர். தபால்துறையினரின் அலட்சியப் போக்கே பார்சல் காணாமல் போனதற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
கடந்த மாதம் 8ம் தேதி, திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுதினர். 479 பேர் இயற்பியல் தேர்வும், 150 பேர் பொருளியல் தேர்வும் எழுதினர்.தேர்வு முடிந்த அன்றைய தினம் மாலை, கோவைக்கு அனுப்புவதற்காக அனைத்து விடைத்தாள்களும் உர சாக்கு பைகளில் கட்டி, 'சீல்' வைக்கப்பட்டு, முசிறி தபால் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.
தனியார் பஸ் மூலம் ஏழு பார்சல்கள் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் பார்சல்களை இறக்கியபோது, அதில், ஒன்றை மட்டும் காணவில்லை. அந்த பார்சலில், 267 இயற்பியல் விடைத்தாள்கள் இருந்தன. இவையனைத்தும் கோவை உப்பிலிபாளையம் பெர்க்ஸ் மேல்நிலைப் பள்ளி மையத்துக்கு செல்லவேண்டியவை.
இதுகுறித்து, திருச்சி ஆர்.எம்.எஸ்., (ரயில்வே மெயில் சர்வீஸ்) தலைமை பதிவுக்கட்டு அலுவலகத்தில் இருந்து முசிறி தபால் நிலையத்துக்கு தகவல் அனுப்பியது. அதே நேரத்தில், 'பார்சல் வந்து சேரவில்லை' என, கோவையில் இருந்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவம் குறித்து தபால்துறையும், கல்வித்துறையும் விசாரணை நடத்தின. அதில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, தபால்துறை மூலம் முசிறி போலீசில் புகார் செய்யப்பட்டது. திருச்சியில் இறக்கியபோது பார்சல் காணவில்லை என்பதால், திருச்சி தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் பழனிச்சாமி, மாநகர போலீஸ் கமிஷனர் வன்னிய பெருமாளிடம் புகார் கொடுத்தார்.அவர் உத்தரவுபடி, கன்டோன்மென்ட் போலீசர் வழக்கு பதிந்தனர்.
திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஆர்.எம்.எஸ்., 'டி' டிவிஷன் மற்றும் தலைமை பதிவுக்கட்டு அலுவலகத்துக்கு, தனிப்படையினர் நேற்று காலை சென்றனர். மதியம் வரை, தபால்துறை உயரதிகாரிகள், அலுவலர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அங்கிருந்த ரிஜிஸ்டர், பார்சல்களை சோதனை செய்தனர்.முதற்கட்ட விசாரணையில், தபால்துறையினரின் அலட்சியப் போக்கே பார்சல் காணாமல் போனதற்கு காரணம் என்று தெரிந்தது.
கடந்த மாதம் 8ம் தேதி பார்சல் அனுப்பப்பட்டது. பொதுவாக காக்கி கலர் பையில், 'சீல்' வைத்து, பார்சல் அனுப்பப்படும். அவை எங்கேயாவது காணாமல் போனால், அரசு பார்சல் என்று மக்கள் எடுத்துக் கொடுத்து விடுவர். ஆனால், உர சாக்கில் விடைத்தாள் அனுப்பப்பட்டதால், அதில் பணம் இருக்கலாம் என்று கருதிக்கூட திருடர்கள் திருடி இருக்கலாம். பார்சல் காணாமல் போன அன்றைய தினமே தபால்துறைக்கும், இரு நாட்கள் கழித்து கல்வித்துறைக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அப்போதே போலீசில் புகார் கொடுத்திருந்தால், ஓரிரு வாரத்திலேயே பார்சலை கண்டு பிடித்திருக்கலாம். இருதரப்பினரும் இப்பிரச்னையை தட்டிக் கழித்ததால், 267 மாணவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.
downlaod this page as pdf