உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

கடும் வெயிலால் கருகும் பூக்கள்: முந்திரி விவசாயிகள் கவலை

 பண்ருட்டி:

              பருவ நிலை மாற்றத்தின் காரணமாக முந்திரி பூக்கும் தருணம் கால தாமதமானதாலும், தற்போது கடுமையான வெயில் காய்வதாலும் முந்திரி பூக்கள் கருகி வருவதால் வேதனை அடைந்துள்ள முந்திரி விவசாயிகள் வருண பகவானை எதிர் நோக்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பூ பூக்க தொடங்கும் முந்திரி மே மாதம் இறுதியில் முந்திரி கொட்டை அறுவடை முடிந்துவிடும்.பண்ருட்டி வட்டத்தில் உள்ள 16900 ஹெக்டர் நிலப்பரப்பில் உள்ள முந்திரிக் காடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் மெட்ரிக் டன் முந்திரி கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

          கடந்த சில ஆண்டுகளாகவே பருவம் தவறிய மழை, புயல், கடும் பனிப்பொழிவு காரணங்களால் முந்திரி மகசூல் குறைந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.டிசம்பர் 2009-ல் பெய்த கனமழை காரணமாக நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்து, பருவ நிலை மாற்றம் ஏற்பட்டதால் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பூ எடுக்க வேண்டிய முந்திரியில் பூக்கும் தருணம் கால தாமதமானது. இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் முந்திரி பூக்கள் கருகி வருவதால் முந்திரி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முந்திரி விவசாயிகள் கானங்குப்பம் பலராமன், மருங்கூர் ராஜசேகர் ஆகியோர் கூறியது:
               
                   ஒரு ஏக்கர் முந்திரியில் சராசரியாக 8 மூட்டை கொட்டைகள் கிடைக்கும். காலதாமதமான பூக்கள், கடுமையான வெயிலால் பூக்கள் கருகி வருகிறது. ஏக்கருக்கு 2 மூட்டை கொட்டை கிடைப்பதே கடினம். செலவை கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இருப்பினும் இச்சமயத்தில் நல்ல மழை பெய்தால் எஞ்சியுள்ள அரும்புகள் பூத்து பிஞ்சு எடுக்க வாய்ப்புள்ளது.  தொடர்ந்து சில ஆண்டுகளாக சோதனையை சந்தித்து வரும் முந்திரி விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என கூறினர்.முந்திரி சார்ந்த தொழில்கள் பாதிப்பு: இந்த ஆண்டு முந்திரி மகசூல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் முந்திரி பறுப்புகளை பதப்படுத்தும் தொழிற்சாலைகளும், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும், முந்திரி தோலில் இருந்து எண்ணெய் எடுக்கும்  தொழிற்சாலைகளும் பாதிப்படையக் கூடும் என கருதப்படுகிறது. இதனால் கிராம பகுதியில் வேலை இழப்பு ஏற்படுவதுடன், முந்திரி பயிர் ஏற்றுமதி குறைவதால் அன்னிய செலாவணி ஈட்டும் திறன் குறைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ராமலிங்கம் கூறியது: "

           எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பூக்கள் கருகி வருகிறது. முந்திரி மரங்களை சுற்றியுள்ள புல், பூண்டுகளை விவசாயிகள் அகற்றி விடுவதால் காடுகளில் வெப்பத்தை சமநிலைப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் தோட்டக்கலை, விவசாய, விவசாய அறிவியல் துறையினர் கூறும் அறிவுரைகளை விவசாயிகள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை.  இவர்கள் தனியார் கடைகளில் கொடுக்கும் மருந்தை வாங்கி பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் அதிக வீரியம் உள்ள மருந்துகளை வாங்கி தெளிப்பதால் மரங்களுக்கு மலட்டுத் தன்மை, இது போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக' ராமலிங்கம் கூறினார். ஆண்டுக்கு ஒரு முறை விளையும் முந்திரிதான் எங்களின் வாழ்வாதார முக்கிய பணப் பயிர் என கூறும் விவசாயிகள் வாடியுள்ள தங்கள் வாழ்வில் ஒளியேற்ற வருண பகவான், காலத்தே நல்ல மழையை தர வேண்டும் என எதிர் நோக்கியுள்ளனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior