உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

திருச்சி கல்வி மாவட்டத்தில் 1456 மாணவர்களின் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்

          
                  திருச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளைச் சேர்ந்த 1456 மாணவ, மாணவிகளின் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்களைக் காணவில்லை.  தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 26 ஆம் தேதி வெளியிடப்பட்டன. 

                     இதைத் தொடர்ந்து, மதிப்பெண் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்திருந்தது. இதன்படி சென்னையிலுள்ள தேர்வுத் துறை அலுவலகத்திலிருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பும் பணி கடந்த சில நாள்களாக மேற்கொள்ளப்பட்டது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் லாரி மூலமாக சனிக்கிழமை திருச்சி வந்தன.  இதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.  திருச்சி வருவாய் மாவட்டத்தில் அடங்கிய திருச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 120 பள்ளிகளுக்கும், லால்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள 50 பள்ளிகளுக்கும், முசிறி கல்வி மாவட்டத்தில் உள்ள 72 பள்ளிகளுக்கும் மதிப்பெண் சான்றிதழ்கள் பிரித்து அனுப்பும் பணி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.  

                இதைத் தொடர்ந்து, திருச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவதற்கு முன்பாக, புத்தூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அவற்றைச் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, 11 பள்ளிகளைச் சேர்ந்த 1456 மதிப்பெண் சான்றிதழ்கள் குறைவாக இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கி. சுவாமிநாதனுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் விசாரணை நடத்தினார்.  

மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமானது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறியது:

                              "சென்னையிலிருந்து லாரி மூலமாக 3 மாவட்டங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் திருச்சிக்கு வந்தன. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கும் வகையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  இதில் திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 120 பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களைச் சரிபார்த்த போது 11 பள்ளிகளைச் சேர்ந்த 1456 மாணவ, மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் குறைவாக இருப்பது தெரிய வந்தது.  சென்னையிலிருந்து அனுப்பும் போது தவறுதலாக அங்கேயே வைத்துவிட்டார்களா, அல்லது திருச்சியில் மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து விட்டு, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு கொண்டு சென்ற போது அந்த மாவட்டங்களின் மதிப்பெண் சான்றிதழோடு சேர்ந்து விட்டனவா என்பது தெரியவில்லை என்றார் அவர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior