உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

மேட்டூர் அணையை காலம் கடந்து பாசனத்துக்கு திறப்பதால் பயன் இல்லை


கடலூர்:
 
                 மேட்டூர் அணையைக் காலம் கடந்து திறப்பதால் பயன் இல்லை. இந்த மாதமே திறக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கருதுகிறார்கள். 
 
                    மேட்டூர் அணையில் இருந்து கிடைக்கும் காவிரி நீரைக் கொண்டு தமிழகத்தில், சுமார் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள். 1972க்கு முன்பு வரை ஜூன் 12-ல், மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா பகுதிகளில் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காவிரி நீர் பிரச்னை தொடங்கிய பின்னர், கர்நாடக அரசு தனது அணைகளில் தேக்கி  வைத்த நீர் போக, வழிந்தோடும் உபரிநீர்தான் தமிழகத்துக்கு வழங்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி முற்றிலும் தடைபட்டு, 16.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா சாகுபடி மற்றும் ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை அல்லது வெள்ளப்பெருக்கு என்ற இரு மாறுபட்ட நிலையைச் சந்திக்க நேரிடுகிறது.
 
              இந்த ஆண்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்காததால் குறுவை சாகுபடி இல்லை. இனி வரும் சம்பா சாகுபடிக்காவது, உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று, டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.  2006-ம் ஆண்டு மேட்டூர் அணை நீர் மட்டம் 115 அடியாக இருந்தபோது, ஜூன் 12-ல் பாசனத்துக்குத் திறக்கப்பட்டது.  2007-ல் 109.8 அடி வரை உயர்ந்த பிறகு, ஜூலை 18-ல் திறக்கப்பட்டது. 2008-ல் 103 அடியாக இருந்தபோது, ஜூன் 12-ல் பாசனத்துக்குத் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு 93 அடியாக இருந்தபோது ஜூலை 28-ல் திறக்கப்பட்டது. தற்போது மேட்டூர் அணை நீர் மட்டம் 81 அடியாக உள்ளது. தென்மேற்குப் பருவமழை தொடங்கி விட்டது.  காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்க இருக்கிறது. எனவே மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்பு இருப்பதால் பாசனத்துக்குத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கருதுகிறார்கள். அணை நிரம்பவில்லை என்று கூறிக்கொண்டு, ஆகஸ்ட் வரை மேட்டூர் அணையை திறக்காமல் காத்து இருந்து, திடீரென பலத்த மழை பெய்து மேட்டூர் அணை நிரம்பி விடுவதால், அணையைத் திறக்கும் அதேநேரத்தில் வடகிழக்குப் பருவ மழையும் வந்து, டெல்டா நிலங்கள் வெள்ளக் காடாகக் காட்சி அளித்த ஆண்டுகளும் உண்டு. நீர் மேலாண்மையில் உள்ள குறைபாடுகளே பாதிப்புகளுக்குக் காரணம் என்கிறார்கள் விவசாயிகள். மேட்டூர் அணையப் பிந்தித் திறந்த ஆண்டுகளில், கடைமடைப் பகுதிகளுக்கு (கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர்) காலம் கடந்துதான் நீர் கிடைக்கிறது. அதே நேரத்தில், கடைமடைப் பகுதிகள் வடகிழக்கு பருவமழையில் சிக்கி பாதிப்பைச் சந்திக்க நேரிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தால் பயிர்கள் நன்கு வளர்ந்து, மழை வெள்ளத்துக்குத் தாக்கு பிடிக்கும் நிலை உருவாகி இருக்கும் என்கிறார்கள். வீராணம் ஏரி நிரம்பி இருக்கும் நிலையில், ஜூன் 20-ம் தேதி மேட்டூர் அணை திறந்தால், 15 தினங்களில் நாற்றங்கால் பணிகளைத் தொடங்கி, ஆகஸ்ட் இறுதிக்குள் சம்பா நடவை முடித்துவிட முடியும்.
 
இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில்,
 
                     காலம் கடந்து தண்ணீர் திறப்பதால், வடகிழக்குப் பருவ மழை தொடங்கி, கடைமடைப் பகுதிகள் வெள்ளப் பாதிப்பைச் சந்திக்க நேரிடுகிறது. சம்பாவுக்குப் பிறகு உளுந்து சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படுகிறது.÷முன்னரே சம்பா சாகுபடியைத் தொடங்கி, வடகிழக்குப் பருவமழையில் குறைவு ஏற்பட்டால்கூட கர்நாடகத்தை அணுகி, நமக்கு உரிய காவிரிநீர் பங்கைப் பெற்று, சம்பா பருவத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். காலம் கடந்து நீர் திறந்தால், வெள்ளச் சேதத்தையும், பல நூறு டி.எம்.சி. நீர் வீணாய் கடலில் கலப்பதையும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என்றார்.
 
இதுகுறித்து வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன் கூறுகையில், 
 
                        மேட்டூர் அணையில் 70 அடி நீர் இருந்தபோதுகூட, பல ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் அணை திறக்கப்பட்டு இருக்கிறது. முன்னரே மேட்டூர் அணை திறப்பதால், உரிய நேரத்தில் சம்பா சாகுபடியைத் தொடங்கி முடிக்க முடியும். காலம் கடந்து திறப்பதால் வடகிழக்குப் பருவ மழையில் பயிர்கள் சிக்கி வெள்ளப் பாதிப்பை சந்திக்க நேரிடும். எனவே விரைவில் மேட்டூர் அணையை பாசனத்துக்குத் திறக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior