எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவ-மாணவியரைச் சேர்க்க சென்னையில் வரும் 28-ம் தேதி முதல் கட்ட கவுன்சலிங் தொடங்குகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் தொடர்ந்து 5 தினங்களுக்கு ஜூலை 2-ம் தேதி வரை முதல் கட்ட கவுன்சலிங் நடைபெறும். இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கை ஜூலை 3-வது வாரம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கவுன்சலிங் நடைபெறுகிறது.
இணையதளத்தில்...:
ரேங்க் பட்டியல் அடிப்படையில் கவுன்சலிங் அட்டவணை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org மூலம் வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் ரேங்க் பட்டியல்: முதல் நாளான ஜூன் 28-ம் தேதியன்று (திங்கள்கிழமை) மாற்றுத் திறனாளிகள், விளையாட்டில் சிறந்து விளங்குவோர், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கும் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 பெற்று சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் கவுன்சலிங் நடைபெறும். மாற்றுத் திறனாளிகளுக்கு கவுன்சலிங் இடத்திலேயே மருத்துவப் பரிசோதனை நடத்தி மதிப்பீடு செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களில், 42 இடங்கள் (3 சதவீதம்) ஒதுக்கப்படும். இந்தக் கல்வி ஆண்டில் (2010-11) மொத்தம் 78 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு 3 எம்.பி.பி.எஸ். இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 2 எம்.பி.பி.எஸ். இடங்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 3 எம்.பி.பி.எஸ். இடங்களும் ஒதுக்கப்படும். சிறப்புப் பிரிவினருக்கான ரேங்க் பட்டியல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.
கட்டணம் எவ்வளவு?
கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அட்டவணைப்படி கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கிடைக்காவிட்டாலும்கூட, கவுன்சலிங் அட்டவணைப்படி கட்-ஆஃப் மதிப்பெண் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மறுகூட்டல், மறு மதிப்பீடு மூலம் திருத்தப்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுன்சலிங் அட்டவணைப்படி தகுந்த ஆதாரங்களுடன் கலந்து கொள்ளலாம். கவுன்சலிங்குக்கு ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்கள் வர வேண்டும். மருத்துவக் கல்லூரி ஆண்டுக் கட்டணம் ரூ.10,495 மற்றும் கவுன்சலிங் கட்டணம் ரூ.500-க்கு The Secretary, Selection Committee, Kilpauk, Chennai-10’ என்ற பெயருக்கு இரண்டு டி.டி.க்களை கவுன்சலிங் வரும்போது எடுத்து வர வேண்டும்.
கட்டணம் திரும்பக் கிடைக்காது:
எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதிக் கடிதம் பெற்ற பிறகு, பி.இ. உள்ளிட்ட வேறு படிப்புகளில் சேரச் செல்லும் நிலையில், மேலே குறிப்பிட்ட கட்டணம் திரும்பத் தரப்பட மாட்டாது என்றார் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக