உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

18,000 எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் குவிந்தன

                 தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 18 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 
 
                    கடந்த ஆண்டு மொத்தம் 14 ஆயிரத்து 321 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்தனர். முதல்முறையாக இந்த ஆண்டு அதிகபட்சமாக 18 ஆயிரம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பத்தை அளிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த கடைசி நாளான திங்கள்கிழமை (மே 31) மட்டும் 3,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர்ந்தது. 
 
                 சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கும் நேரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து அங்கு வைத்திருந்த பெட்டியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை போட்டனர்.சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 348 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள்-சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த மே 17-ம் தேதி முதல் தொடங்கியது.
 
                இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு 25,000 விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அச்சடித்தது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் மொத்தம் 20,100 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 30) மாலை வரை மொத்தம் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. கடைசி நாளான திங்கள்கிழமை மட்டும் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர்ந்தன.மே 31-ம் தேதியிட்ட அஞ்சல் முத்திரையுடன் தாமதமாக வரும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.
 
ஜூன் 11-ல் ரேங்க் பட்டியல்: 
 
                       எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 9-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. வரும் 11-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 21-ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior