கடலூர்:
கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில், ரூ.2.5 கோடியில் நடைபெற்று வரும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, திருப்திகரமாக இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, இந்த ஆண்டு ரு. 12 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில், 56 பாசன வாய்க்கால்கள் மராமத்துப் பணிக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அணைக்கரை உள்கோட்டத்தில் 26 பணிகளும், சிதம்பரம் உள்கோட்டத்தில் 30 பணிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. தூர்வாரும் பணியை இயந்திரம் மூலம் செய்தால் கன மீட்டருக்கு ரூ.32.60-ம், ஆட்களைக் கொண்டு செய்தால் கன மீட்டருக்கு ரூ.26.80-ம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இயந்திரங்களைக் கொண்டே பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பதிவேடுகளில் உள்ளபடி சர்வேயர் மூலம் அளந்து, கல் போட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று, ஆண்டுதோறும் தெரிவிக்கப்படும் கோரிக்கை, இந்த ஆண்டும் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கிறார்கள். மேலும் படுகை மட்டத்தை அளந்து, அதற்கு ஏற்ப திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். படுகை மட்டத்தை கணக்கிடாமல் தூர்வாருவதால் வாய்க்கால்கள் அனைத்தும் பள்ளமாகி, வயல்களுக்குள் தண்ணீர் பாய்வதில் சிரமம் ஏற்படுவதாந்வும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இப்பணிகளைக் கண்காணிக்க, ஒவ்வொரு வாய்க்கால்களுக்கும் தனித்தனியே விவசாயிகள் கண்காணிப்புக் குழு (2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டது போல்) அமைக்க வேண்டும் என்று விவசாயிகள், மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்திலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் கோரிக்கை வைத்தனர்.
எனினும் கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, திருப்தியற்ற நிலையில், பணிகள் நடைபெற்று வருவதாக, விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.மேலும் 20 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்து உள்ளன. மேட்டூர் அணையில் தண்ணீர் திருப்திகரமாக இருப்பதால், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறக்கப்பட்டால், வாய்க்கால்களில் தண்ணீர் ஓடி, தூர்வாரும் பணி தடைபட்டு, ஏனோ தானோவென்று மேற்கொள்ளப்பட்டு, பணம் மட்டும் பட்டுவாடா செய்யப்படும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.இப்போதாவது...
இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
வாய்க்கால்களை அளந்து, கல்போட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, படுகை மட்டத்துக்கு ஏற்ப, தூர்வாரவேண்டும் என்று கோரினோம். ஒவ்வொரு வாய்க்காலுக்கும் விவசாயிகள் கண்காணிப்புக் குழு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரினோம். ஆனால் எந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. கண்காணிப்புக் குழுக்களுக்கு விவசாயிகளின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டும் இருந்தது. ஆனால் உயர்மட்டத் தலையீடு காரணமாக, அந்த கோப்பு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. 20 சதம் பணிகள்தான் முடிந்து உள்ளன. இப்போதாவது எங்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.
பணம் மட்டும்...
கொள்ளிடம் கீழணை விவசாயிகள் சங்கத் தலைவர் கண்ணன் கூறுகையில்,
பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. வாய்க்கால்கள் பல ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. வாய்க்காலுக்கு 3 விவசாயிகள் கொண்ட கண்காணிப்புக் குழு பரிந்துரைக்கப்பட்டும், நடைமுறைப்படுத்தவில்லை. சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியில் நீர் நிரப்பி உள்ளதால், அனைத்து வாய்க்கால்களிலும் நீர் கசிந்து, தூர்வார முடியாத நிலை உள்ளது. ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டால், தூர்வாரும் பணி முறையாக நடைபெறாமல், பணம் மட்டும் பட்டுவாடா ஆகும் நிலை உள்ளது என்றார்.
முன்னுதாரணம் இல்லை.
இதுகுறித்து பொதுப்பணித்துறை கொள்ளிடம் வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் செல்வராஜிடம் கேட்டதற்கு,
தூர்வாரும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. விவசாயிகள் கோரிக்கைப்படி, கண்காணிப்புக்குழு அமைக்க முன்னுதாரணம் இல்லை. எனவே அமைக்கவில்லை. 56 பணிகளில் 30 பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் 50 சதவீதம் வேலை முடிந்துவிட்டது. மேட்டூர் அணை ஜூலை இறுதியில்தான் திறக்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துவிடும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக