தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) தொடங்குகிறது. தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடுகளில் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் 45 நாள்களுக்கு கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட உள்ளது.
கணக்கெடுப்பு பணி முடிவடையும்போது ஒவ்வொருவருக்கும் தனிநபர் அடையாள அட்டை வழங்கப்படும்.2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மே மாதம் வரை, 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. தமிழகம் உள்பட எஞ்சியுள்ள மாநிலங்களில் ஜூன் 1-ம் தேதி தொடங்கி, ஜூலை 15-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. கணக்கெடுக்கும் பணியில் 25 லட்சம் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்களும், மத்திய, மாநில அரசு ஊழியர்களும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
என்னென்ன தகவல்கள்...
இம்முறை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.ஒவ்வொரு வீட்டின் அமைப்பு (குடிசை வீடா, ஓட்டு வீடா, மாடி வீடா), வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, மணமான தம்பதிகள் எத்தனை பேர் உள்ளனர்? வீட்டில் மின் இணைப்பு உள்ளதா? குடிநீர் இணைப்பு உள்ளதா? கழிவுநீர் வசதி உள்ளதா? எரிவாயு இணைப்பு உள்ளதா? உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. மேலும், இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் உள்ளதா? செல்பேசி மற்றும் லேண்ட்லைன் போன் உள்ளதா? சைக்கிள், மோட்டார் வாகனம் அல்லது கார் உள்ளதா? வங்கிக் கணக்கு உள்ளதா? தற்போதைய முகவரி மற்றும் நிரந்தர முகவரி என்ன? இந்தியரா அல்லது வெளிநாட்டவரா? உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின், விவரங்களை சேகரித்த அரசு ஊழியரும், குடியிருப்பில் இருப்பவரும் கையெழுத்து இடவேண்டும். இதற்கு ஒப்புகைச் சீட்டு ஒன்றும் குடியிருப்பில் இருப்பவருக்கு வழங்கப்படும். இந்த ஒப்புகைச் சீட்டை மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பமும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வரும் பணியாளர்களிடம், தகவல்களை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்தத் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய புகைப்படத்தையோ, வேறு நகல்களையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்களை மட்டும் தெரிவித்தால் போதும். சிறப்பு முகாம்: இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் அந்தந்தப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புகைப்படமும், கைரேகை பதிவும் எடுக்கப்படும். இந்த முகாமுக்கு வரும்போது இப்போது அளிக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மக்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.இந்த முகாமுக்குப் பின் ஒவ்வொருக்கும் தனிநபர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக