தோட்டத்தில் கொட்டப்பட்டுள்ள பழுத்து, அழுகிய பலாப்பழங்கள்.
பண்ருட்டி:
பலாப்பழம் அறுவடை மும்முரம் அடைந்து வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழம் ஒன்று ரூ.40 முதல் 100 வரை விற்பனையாவதால் விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர். பலாப்பழம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது பண்ருட்டி.
பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்கு தென்பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள முந்திரி காடுகளுக்கு இடையேயும், வீட்டுத் தோட்டத்திலும் பலா மரம் வளர்க்கப்படுகிறது. இப்பகுதியில் விளையும் பலாப்பழம் மிகுந்த சுவை கொண்டது. இதனால் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பண்ருட்டி பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவர், பலாப்பழம் கமிஷன் மண்டி வைத்துள்ள வியாபாரிகள் பலாப்பழத்தை விவசாயிகளிடம் இருந்து பெற்று தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள வியாபாரிகளுக்கு டன் கணக்கில் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.பருவநிலை மாற்றத்தினால் இம்முறை பலா மரங்கள் காலதாமதமாக காய்ப்பெடுத்தாலும், மகசூல் பாதிக்கப்படவில்லை. தற்போது அறுவடை சீசன் உச்சகட்டத்தில் உள்ளதால் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளும், கமிஷன் மண்டி வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்.
இது குறித்து பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் பலாப்பழம் கமிஷன் மண்டி வைத்துள்ள பி.ஆர்.மாயவேல் கூறியது:
விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் அறுவடை செய்து கொண்டு வரும் பலாப்பழங்களை பெற்று கமிஷன் அடிப்படையில் விற்று கொடுத்து வருகிறோம். பண்ருட்டியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், மும்பை, பெங்களூர், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் அனுப்பி வைக்கிறோம்.தற்போது அறுவடை சீசன் உச்ச நிலையில் உள்ளதால் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு சில வாரத்துக்கு முன் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் விலை போன ஒரு டன் பலாப்பழம் தற்போது ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரைதான் விலை போகிறது.விற்பனைக்காக அனுப்பியது போக எஞ்சிய பழுத்த, அழுகிய பலாப்பழங்களை குப்பையில் கொட்டி வருகிறோம். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளோம் என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக