உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நேரடி உளுந்து சாகுபடிக்கு புதிய நடைமுறை: விவசாயிகள் கோரிக்கை

கடலூர்:

            கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நேரடி உளுந்து சாகுபடிக்கு வேளாண்துறை புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: 

                கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் ஆண்டுதோறும், தென்மேற்குப் பருவமழை மற்றும் மேட்டூர் அணையின் நீர் அளவைக் கொண்டு, 1.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. செப்டம்பர் முதல் 5 மாதங்கள் சம்பா நெல் சாகுபடியும், அதைத் தொடர்ந்து 3 மாதங்கள் ஊடுபயிராக உளுந்து சாகுபடியும் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக எதிர்பாராத கனமழை, காலம் கடந்து மேட்டூர் அணை திறப்பு, போதிய தரமான விதை கிடைக்காத நிலை போன்ற காரணங்களால்  உளுந்து சாகுபடி திருப்திகரமாக இல்லை. உளுந்து சாகுபடி வருவாய் இல்லாததால் விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும், மாநிலத்தில் குறைந்து வரும் பயிர் வகைகள் சாகுபடியை அதிகரிக்கவும், புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும். சம்பா சாகுபடி முடிந்ததும், இயந்திரங்களைக் கொண்டு அறுவடை முடிந்தபின், ஊடுபயிராக உளுந்து சாகுபடி சாத்தியமற்றதாக உள்ளது. எனவே நேரடி உளுந்து சாகுபடி செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே இதுபற்றி விவசாயிகளின் கோரிக்கையை, மாவட்ட ஆட்சியர் வரவேற்று ஆவன செய்வதாக உறுதி அளித்து இருக்கிறார். தேவைப்படும் தண்ணீரை வழங்க பொதுப்பணித்துறை தயாராக உள்ளது. எனவே டெல்டா பாசனப் பகுதிகளில் நேரடி உளுந்து சாகுபடிக்கான புதிய நடைமுறையை உருவாக்க, ஆட்சியர் தலைமையில், கோவை வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆடுதுறை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், மாவட்ட வேளாண் உதவி இயக்குநர்கள், முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் புதிய நடைமுறையை உருவாக்க மாவட்ட ஆட்சியர் உதவிசெய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior