உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

கடலூர் நகராட்சியின் கல்விநிலை: 100 குடும்பங்கள் நிறைந்த பகுதியில் ஒரே ஒரு பட்டதாரி


கடலூர் நகராட்சிப் பகுதியில் கல்வியில் பின்தங்கி இருக்கும் அருந்ததி நகர்.
கடலூர்:

             பொதுவாக தமிழகத்தில் நகர்ப் புறங்களில் கற்றறிந்தோர் கணிசமாக உள்ளனரென்றும், கிராமப் புறங்களில்தான் கல்வி அறிவு இன்னமும் வளர வேண்டியது இருக்கிறது என்றும் புள்ளி விவரங்களைக் கொண்டு அரசு தெரிவித்து வருகிறது.

             ல்வி அறிவு பெற்றோர் தமிழகத்தின் சராசரி 73.45 சதவீதம். கடலூர் மாவட்டத்தின் சராசரி கல்வி நிலை 71.01 சதவீதம் என்று 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.  கிராமப் புறங்களில் மட்டுமன்றி நகர்ப் புறங்களிலும் கல்வி நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது என்பதை நிரூபித்து இருக்கிறது கடலூர் நகராட்சி.  இந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மஞ்சக்குப்பத்தை அடுத்து உள்ளது அருந்ததி நகர். 100 குடும்பங்களுக்கு மேல் மக்கள் வசிக்கின்றனர். இன்றைய கணக்குப்படி, இங்கு ஒரே ஒரு பட்டதாரிதான் உள்ளார். கல்லூரியில் படிப்போர் ஒரு மாணவி உள்பட 5 பேர்தான். 

                 கடலூர் நகருக்கு கல்வி உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக அரசு பல கோடி செலவிடுகிறது. ஆனால் இங்கு  படிப்பைப் பாதியில் விட்டோர் மீண்டும் படிக்க வாய்ப்பைத் தேடிக்கொடுக்க, எந்த இயக்கமும் கால் பதிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டும் சம்பவம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.  இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை இந்த நகருக்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும் ஒரு சிறுவன் ஓடோடி வந்தான். 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் நின்றுவிட்டேன். நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன் உதவுங்கள் என்று கண்ணீர் மல்க கூறினான்.  கமலக்கண்ணன் என்ற அந்தச் சிறுவனின் பெற்றோர், 4 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர். கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் ஆரம்பப் பள்ளியில் கற்ற அவனது படிப்பு, 5-வது வகுப்புடன் நின்றது. 75 வயது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார் அந்த அனாதைச் சிறுவன்.  சமீபத்தில் கமலக்கண்ணனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததன் காரணமாக, அப்பள்ளிக்குச் சென்று தனது மாறுதல் சான்றிதழைக் கோரியபோது, மாதா, பிதா ஸ்தானத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தலைமை ஆசிரியரோ, 4 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவரின் சான்றிதழைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். 3 முறை சென்றும் கமலக் கண்ணனால் மாற்றுச் சான்றிதழைப் பெறமுடிய வில்லை. இந்த நிலையில்தான் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் அருந்ததி நகருக்குச் சென்றபோது, அந்த மாணவரின் ஆவல் வெளிப்பட்டது. அந்த மாணவருக்கு மாற்றுச் சான்றிதழைப் பெற்று, மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து படிக்க வைக்க, அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க இருப்பதாக, குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் தெரிவித்தார். 

                     மாணவனின் கல்விச் செலவு மற்றும் வாழ்க்கைச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ளவும் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.  அருந்ததி நகரில் மாணவ மாணவியரின் பொறியியல் படிப்பு உள்ளிட்ட மேல் படிப்புக்கு, அனைத்து உதவிகளையும் அளிப்பதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். 36 ஏழை மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களை கூட்டமைப்பின் தலைவர் அரங்கநாதன் வழங்கினார். இணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior