உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

வேளாண் துறையில் ஆங்கிலத்தில் இருந்த சேவை மையத்தின் பெயர் தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது


கடலூர்:

                தினமணிச் செய்தியின் விளைவாக, வேளாண் துறையில் ஆங்கிலத்தில் இருந்த சேவை மையத்தின் பெயர் தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது. 

               மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு வேளாண் சேவை மையம் வீதம் தொடங்கப்பட்டு வருகிறது. வேளாண் பட்டதாரிகள், ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர்கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு 50 சதம் மானியத்தில் ரூ.6 லட்சம் அரசு நிதி வழங்கி, அதன் மூலம் இந்தச் சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற்றுத் தருவது, வேளாண் கருவிகளை வாடகைக்கு வழங்குவது, மண் பரிசோதனை செய்வது, வேளாண் இடுபொருள்களை விற்பனை செய்வது போன்ற பணிகளை இந்தச் சேவை மையங்கள் மேற்கொள்ளும்.

              இந்த வேளாண் சேவை மையங்களுக்கு, "அக்ரி கிளினிக்' என்றும் சிறிய மண் பரிசோதனை நிலையத்துக்கு "மினி மண் பரிசோதனை நிலையம்' என்றும், வேளாண் துறை பெயரிட்டு செயல்படுத்தி வந்தது. நமது படிப்பறிவற்ற பாமர வேளாண் குடிமக்களுக்கான இத்திட்டம், அவர்களுக்குப் புரியம் வகையில், இந்த மையங்களின் பெயர்கள் தமிழில் இருக்கலாமே என்ற ஆலோசனையைத் தெரிவிக்கும் வகையில் 21-6-2010 அன்று தினமணி செய்தி வெளியிட்டு இருந்தது. 

           இதுகுறித்துக் கடலூர் மாவட்ட வேளாண் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆங்கிலத்தில இருந்த பெயர்களைத் தமிழாக்கம் செய்து உள்ளதாக, கடலூர் வேளாண் உதவி இயக்குநர் சீ.இளவரசன் அண்மையில் செய்திக் குறிப்பு வெளியிட்டு இருக்கிறார். அக்ரி கிளினிக் என்பது "வேளாண் ஆலோசனை மையம்' என்றும், மினி சாயில் டெஸ்டிங் லேப் என்பது, "சிறு மண் பரிசோதனை நிலையம்' என்றும் தமிழில் பெயர் மாற்றம் செய்து, பெயர்ப் பலகை சம்பந்தப்பட்ட மையத்தில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் இளவரசன் செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior