சென்னை:
நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிலாளர்களின் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு வெளியிட்ட அறிக்கை:
நெய்வேலி மின் உற்பத்தி நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் புதன்கிழமை (ஜூன் 30) இரவு முதல் நடைபெற்று வருகிறது. 14 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுக்கும் பலன் கிடைக்கும் வகையில் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களது கோரிக்கை நியாயமானதுதான். இது தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் தொழிலாளர் ஆணையருடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இதனால், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
மின்பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் நெய்வேலியில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், பெரும் பாதிப்பு ஏற்படும்.தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே, சுமுகத் தீர்வு ஏற்பட்டு தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவது மிகவும் அவசியமாகும். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, நிலக்கரித் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வால், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் நேரடியாக தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.இது மத்திய அரசின் கடமையாகும். கோரிக்கையில் நியாயம் இருந்தாலும் அதற்கு வேலைநிறுத்தம் மட்டுமே தீர்வு என்ற பிடிவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் உடன்பட வேண்டும் என்று தங்கபாலு கட்டுக் கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக