நெல்லிக்குப்பம்:
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் ஆலை கழிவுநீர் சென்று விவசாய பயிர்களை பாதிப்பதால் ஆலை சார்பில் வாய்க்கால் தூர்வாரும் பணியை டி.ஆர்.ஓ., துவக்கி வைத்தார். பண்ருட்டி திருவதிகை கெடிலம் ஆற்றின் கிளை வாய்க்கால் எய்தனூர், குணமங்கலம், ஓட்டேரி வழியாக செல்கிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இவ்வாய்க்காலில் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆண்டு முழுவதும் செல்கிறது.
பல ஆண்டுகளாக வாய்க்கால் தூர்வாராதால் கழிவுநீர் தடைப்பட்டு விவசாய நிலத்தில் புகுந்து விடுகிறது. மழைக்காலங்களில் கழிவுநீர் நிலத்தில் புகுவதால் பயிர்கள் பாதிக்கப்படுகிறது. வாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். வாய்க்காலில் கழிவுநீர் செல்வதால் ஆலை நிர்வாகம் சொந்த செலவில் வாய்க்காலை தூர்வார முடிவு செய்தனர். அதற்கான பணியை டி.ஆர்.ஓ. நடராஜன் துவக்கி வைத்தார். கலெக்டரின் விவசாயத்துறை நேர்முக உதவியாளர் மணி தாசில்தார் பன்னீர் செல்வம், தஷ்ணாமூர்த்தி, பொதுப்பணித் துறை பொறியாளர் அன்பு, வேளாண்மை உதவி இயக்குநர் சம்பத்குமார், ஆலை உதவி பொது மேலாளர் சங்கரலிங்கம், மேலாளர் திருஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கழிவுநீர் செல்லும் அனைத்து கிளை வாய்க்கால்களையும் ஆலை நிர்வாகம் தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக