உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

புத்தகங்களை படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம்: என்.எல்.சி. 2-ம் சுரங்க முதன்மைப் பொதுமேலாளர் ராமலிங்கம்


  நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் (இடமிருந்து)
நெய்வேலி:
 
        நல்ல புத்தகங்களை படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்று என்.எல்.சி. 2-ம் சுரங்க முதன்மைப் பொதுமேலாளர் ராமலிங்கம் பேசினார்.
 
நெய்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் 5-ம் நாள் விழாவில்என்.எல்.சி. 2-ம் சுரங்க முதன்மைப் பொதுமேலாளர் ராமலிங்கம் பேசியது:
 
              புத்தகங்களை நாம் தலைகுனிந்து படிக்கிறோம். அப் புத்தகமே எதிர்காலத்தில் நம்மை தலைநிமிர்ந்து வாழ வைக்கும். ஒரு மனிதன் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அவன் வாழும்போது அவன் படைக்கும் படைப்புகளே அம் மனிதன் வாழ்ந்த காலத்தை மேல்நோக்கி நிறுத்துகிறது. மாணவர்களும் இளைஞர்களும் புத்தக வாசிப்பை ஒரு கடமையாக கொள்ள வேண்டும். புத்தகத்தில் கிடைக்கும் நல்ல செய்திகளை விதையுங்கள். 
 
               கெட்ட செய்திகளை புதையுங்கள் என்றார் ராமலிங்கம்.தினமும் எழுத்தாளர் பாராட்டப்படுபவர் என்ற வரிசையில் எழுத்தாளர் உத்தமசோழன் விழாவில் பாராட்டப்பட்டார். அவர் பேசியது:நான் வருவாய்த் துறையில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட அனுபவங்களையும் சம்பவங்களையும் வைத்தே நாவல் எழுதியுள்ளேன். நெய்வேலி புத்தகக் கண்காட்சி சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு நிகராக விளங்குகிறது என்றார் உத்தமசோழன்.
 
நெருஞ்சி என்னும் சிறுகதை நூலை வெளியிட்டு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பேசியது:
 
               குழந்தைகளுக்கு உண்டியல் வழங்கி சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் புத்தகம் வாங்கும் யுக்தியை ஈரோடு புத்தகக் கண்காட்சி குழுவினர் செய்து வருகின்றனர்.   குழந்தைகள் உண்டியல்களில் சேமிக்கும் பணத்தை கொண்டு புத்தகங்களை வாங்கும்போது அதைக் காட்டிலும் 2 மடங்கோ அல்லது 3 மடங்கோ புத்தகங்களை பரிசாக வழங்குகின்றனர். புரவலர்களும் பதிப்பகத்தாரும் செய்துவரும் இந்த ஊக்கமிகு நிகழ்வை நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவினரும் ஏனைய புத்தகக் கண்காட்சி நடத்தும் குழுவினரும் பின்பற்ற வேண்டும்.
 
               நெய்வேலியில் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகக் கண்காட்சி நடத்தி, தமிழுக்கும் இலக்கியத்திற்கும், தொண்டாற்றிவரும் என்.எல்.சி. நிறுவனத்தைப் பாராட்டி  தமிழக அரசு பரிசு வழங்க வேண்டும் என்பது எனது அவா.சாதாரணமாக இது போன்று நிறுவனங்கள் நடத்தும் விழாவில் ஆங்கிலத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் இந்த அரங்கில் தமிழுக்கு முதலிடம் அளித்துப் பெருமை சேர்த்துள்ளீர்கள். 
 
நெய்வேலியை தமிழகம் பின்பற்றுமா? 
 
             தொலைக்காட்சிப் பெட்டிகளும் கணினிகளும் அறிவியல் உலகுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள். தட்டிவிட்டால் தகவல்கள் கிடைக்கின்றன.ஆனால் வெளிநாடுகளில் உள்ள குழந்தைகள் கம்ப்யூட்டரை தட்டிவிட்டால் எழுத்துகள் வந்துவிடுகின்றன. இதனால் அவர்களுக்கு எழுத்துகளை எழுதக்கூட தெரியாத நிலை ஏற்பட்டு மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்குள்ள குழந்தைகள் மீண்டும் எழுத்துகளை எழுதிப் பார்க்கும் பழக்கத்துக்கு மாறி வருகிறார்கள் என்றார் ஆசிரியர் வைத்தியநாதன். தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்பனாதேவி வரவேற்றார். பேராசிரியர் சோ.சத்யசீலனின் சொற்பொழிவு நடைபெற்றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior