விருத்தாசலம்:
தொழூர் ஊராட்சியில் இரண்டு குடிநீர் தொட்டிகள் இருந்தும் குடிநீருக்கு விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களை நாடிச் செல்லும் அவல நிலை உள்ளது. விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ளது தொழூர் கிராமம். தனி ஊராட்சியாக செயல்படும் இக்கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்திற்குச் செல்லும் சாலை சரியில்லை என்பதோடு இல்லாமல், அடிப்படை தேவையான குடிநீருக்காக அக்கிராம மக்கள் தினமும் அல்லாடி வருகின்றனர்.இக்கிராம மக்களுக்கு தோப்பு தெரு பகுதியில் கோவில் அருகில் போர்வெல் அமைத்து குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது.
இதில் இருந்து மேலத்தெரு பகுதிக்கு சரியாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு தவித்து வந்தனர்.இந்த பிரச்னையைப் போக்க கடந்த 2002 - 2003ம் ஆண்டில் ராஜிவ்காந்தி தேசிய கிராம குடிநீர் திட்டத்தின் மூலம் மேலத்தெரு பகுதியில் புதிய போர்வெல்லுடன், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப் பட்டது. இருந்தும் போர் வெல்லில் இருந்து வரும் தண்ணீர் பழுப்பு நிறத்தில் இருப்பதால் அதை குடிக்க முடியாத நிலை இருந்தது.புதிய போர்வெல் அமைத்தும் குடிநீர் கிடைக்காததால் கடந்த 2007 - 2008ம் ஆண்டு அப் பகுதியில் மினி வாட்டர் டேங்க் அமைக்கப் பட்டது. இதிலிருந்து மேலத்தெரு மக்கள் குடிநீர் பிடித்து வந்தனர். இதுவும் சரிவர இயக்கப்படாமல் தற்போது பூட்டியே கிடக்கிறது. இதனால் மேலத்தெரு மக்கள் குடிநீருக்கு விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களையே நாடி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பானுமதி கூறுகையில்,
"எங்கள் ஊரில் நாங்கள் வசிக்கும் மேலத்தெரு பகுதியில் தான் குடிநீர் பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. ஆறு ஆண்டிற்கு முன் போட்ட போரில் இருந்து வரும் தண்ணீர் பழுப்பு கலரில் வருவதால் குடிக்க முடியாது. துணி துவைக்கவும், பாத்திரங்கள் கழுவ மட்டுமே பயன்படுத்துகிறோம்.அதற்குப்பிறகு போடப்பட்ட மினி டேங்கில் தண்ணீர் பிடித்து வந்தோம். ஆனால் தற்போது அந்த குடிநீர் தொட்டியும் பயன்பாடின்றி உள்ளது. நாங்கள் விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களில் இருந்துதான் குடிக்க தண்ணீர் பிடித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஒரு பெரிய டேங்க், ஒரு மினி டேங்க் இருந்தும் எந்த பயனும் இல்லை. நாங்கள் குடிநீருக்கு அலைவது தொடர்கதையாகவே உள்ளது' என வேதனையோடு தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக