கடலூர்:
கடலூர் அருகே அதிவேகமாக வந்த டிப்பர் மற்றும் டாரஸ் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவி உட்பட நான்கு பேர் உடல் நசுங்கி இறந்தனர். ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தினால் கடலூர் - புதுச்சேரி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
கடலூர் அருகே நடந்த இந்த கோர விபத்து குறித்த விவரம் வருமாறு:
புதுச்சேரியிலிருந்து டி.என்.32.சி-8319 பதிவெண் கொண்ட டிப்பர் லாரி நேற்று மாலை 4.45 மணிக்கு அதிவேகமாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கடலூர் அருகே சின்ன கங்கணாங்குப்பம் வந்த போது டிப்பர் லாரியின் "ஆக்சில்' முறிந்தது. அதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அதே திசையில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது மோதி எதிரே சிமென்ட் ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் இரண்டு லாரிகளின் முன்பக்கமும் அப்பளம் போல் நொறுங்கின. மோதிய வேகத்தில் டாரஸ் லாரியின் முன் பக்க அச்சு முறிந்து வலது புறமாக கவிழ்ந்தது. அதே போல டிப்பர் லாரியும் நடுரோட்டில் கவிழ்ந்தது. டாரஸ் லாரியில் சிமென்ட் லோடு இருந்ததால் கவிழ்ந்த வேகத்தில் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அருகில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவி பரசுராமன் மகள் பவித்ரா (10), மேட்டுப்பாளையம் ஆறுமுகம் (42), டாரஸ் லாரி டிரைவர் ரவி (26), கடலூர் புதுப்பாளையம் கான்வென்ட் தெருவைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் சிவக்குமார் (42) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த டாக்டர் ரூபநாதன் கால் எலும்பு முறிந்தது. பரசுராமனின் மற்றொரு மகள் பாரதி (7), டிப்பர் லாரி டிரைவர் கோதண்டபாணி (35), கடலூர் ஜோதி (47), ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் (18), ரமேஷ் (22), கிளீனர் தட்சணாமூர்த்தி (30), பரசுராமன் (40) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் - புதுச்சேரி பிசியான சாலையில் விபத்து நடந்ததால் இரு திசையிலும் ஏராளமான வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கலெக்டர் ஆறுதல்:
விபத்தில் சிக்கி கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எம்.பி., அழகிரி, எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
வீட்டின் அருகே நடந்த சோகம்:
சின்ன கங்கணாங்குப்பம் பள்ளியில் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகள்கள் பவித்ரா (10), பாரதி (7) இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வீட்டிற்கு 100 அடி தூரம் அருகே வந்த போது டாரஸ் லாரி மீது மோதிய டிப்பர் லாரி மாணவிகள் மீது கவிழ்ந்தது. அதில் பவித்ரா அதே இடத்தில் இறந்தார். பாரதி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். ஒரு சில நொடிகளில் சாலையோரத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையில் மாணவிகள் விபத் தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக