திருவதிகை சுடுகாட்டில் குப்பை கொட்டிய நகராட்சி குப்பை வண்டியை மக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனர். பண்ருட்டி நகரப் பகுதியில் நாள் ஒன்றுக்கு 6 டன் அளவுள்ள குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடவசதி இல்லாததால் அவை பல்வேறு இடத்தில் கொட்டப்படுகிறது. பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள சுடுகாடு முழுவதும் குப்பைகள் கொட்டப்பட்டு தற்போது பிணம் புதைக்க இடம் இல்லாததால் ஆற்றில் புதைத்து வருகின்றனர். குப்பைகளை கெடிலம் நதியில் கொட்டி வருவதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாள்களாக திருவதிகை சுடுகாட்டில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வந்தது. இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சுடுகாட்டில் குப்பை கொட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி சனிக்கிழமை குப்பை கொட்ட வந்த வண்டியை கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலர் பி.துரை தலைமையில் மக்கள் சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்த ஆணையர் கே.உமாமகேஸ்வரி, நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் ஆகியோர் மக்களிடம் சமரசம் பேசி குப்பை கொட்ட மாட்டோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் வண்டியை விடுவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக