சிதம்பரம், நவ.22:
சிதம்பரம் அருகே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை பஞ்சாயத்தார் முன்னிலையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தை அடுத்த கொடிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் த.சரவணக்குமார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் விரிவுரையாளராக உள்ளார். இவர் கொடிப்பள்ளம் அருகே உள்ள பின்னத்தூர் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒளிமுகமது என்பவருக்குச் சொந்தமான நிலத்தை 2005-ம் ஆண்டு முதல் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்துள்ளார். அந்த நிலத்தை ஆதிதிராவிடர்களுக்கு பட்டா வழங்குவதற்காக ஆதிதிராவிட நலத்துறை மூலம் கிராமப் பஞ்சாயத்தார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனிடையே ஒளிமுகமது நிலத்தை விற்பனை செய்ய முன்வந்த போது அந்த நிலத்தை சரவணக்குமார் வாங்கியுள்ளார். இந்நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஊர் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பதற்காக அந்த நிலத்தைத் தருமாறு கேட்டனர். அதற்கு சரவணக்குமார் மறுத்ததால் கிராம பஞ்சாயத்துக்கு அழைத்து இந்த நிலத்தை ஊருக்காக விட்டுக் கொடுக்க வேண்டும் எனக்கோரினர். அதற்கும் சரவணக்குமார் மறுத்தததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரவணக் குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில்அவர் தெரிவித்துள்ளதாவது: "17-11-09ல் ஊர்பஞ்சாயத்தைக் கூட்டி அந்த நிலத்தில் நான் பயிரிடக்கூடாது, எனது வீட்டுக்கு யாரும் செல்லக்கூடாது, எனக்கு கடைகளில் மளிகை சாமான் கொடுக்கக்கூடாது, என்னுடன் யாரும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்ததோடு மீறி தொடர்பு கொண்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் போட்டுள்ளனர். இதனால் தனிமனித உரிமை பாதிக்கப்பட்டு நான் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளேன்' என்று கிள்ளை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார். கிள்ளை போலீஸôர் புகாரைப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இதுகுறித்து சென்னை மனித உரிமை ஆணையம், கடலூர் மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிட நலத்துறை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சரவணக்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கோ.தன்வந்தகிருஷ்ணன் தலைமையில் அமைதிக் கூட்டம் சனிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் கிராம பஞ்சாயத்தார் மற்றும் சரவணக்குமார், கிள்ளை சப்-இன்ஸ்பெக்டர் அஸ்கர்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டுமனைப்பட்டா வழங்க சரவணக்குமார் வாங்கியுள்ள நிலம் தேர்வுசெய்ப்பட்டு அரசு பரிந்துரைக்கு சென்றுள்ளது. நிலஆர்ஜிதம் செய்ய அரசாணை வரும் வரை சரவணக்குமார் நிலத்தில் பயிரிடுவதை யாரும் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால் தடுப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நிலஆர்ஜிதம் செய்வதற்கான முயற்சிகளை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் விரைந்து முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக