கடலூர் :
கடலூரில் அனுமதியின்றி வளர்க் கப்பட்ட யானையை மீட்ட வனத்துறையினர் கோர்ட் உத்தரவின்படி வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் நேற்று ஒப்படைத்தனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட யானையை கடந்த 17ம் தேதி வனத்துறையினர் கைப்பற்றினர். யானை உரிமையாளர் பழனி மற்றும் பாகன் ராஜேந்திரனை கைது செய்தனர். யானை பாலூர் அடுத்த சித்தரசூரில் உள்ள தென்னந்தோப்பில் வனத்துறையினர் பாதுகாப்பில் இருந்தது. இந்நிலையில் யானையை எங்குவிடவேண்டும் என்பது குறித்து வனத் துறை சார்பில் நேற்று முன்தினம் கடலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ரமேஷ், வழக்கு முடியும் வரை யானையை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
அதன்படி வண்டலூருக்கு யானையை அழைத்து செல்வதற்காக சி.என்.பாளையம் கால்நடை மருத்துவர் கமலக்கண்ணன் பரிசோதனை செய்து சான்று வழங்கினார். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு வன சரகர்கள் பன்னீர்செல்வம், சீனிவாசன், வனவர் கள் ஞானசுந்தரம், மணி, வனகாப் பாளர்கள் ராஜேந்திரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் யானையை லாரியில் ஏற்றிச் சென்று பகல் 12 மணிக்கு வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு யானையை மருத்துவர்கள் சோதனை செய்து உணவு வழங்கினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக