எந்தப் பொருளும் கோராமல், ரேஷன் அட்டை மட்டும் கேட்டு விண்ணப்பிப்போருக்கு 15 நாளில் அட்டை வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்த அட்டைகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு, பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் மக்கள் தெரிவிக்கும் விருப்பத்தின் அடிப்படையில் அரிசி பெறுவதற்கான ரேஷன் அட்டைகள், அரிசிக்குப் பதிலாக கூடுதல் சர்க்கரை பெறுவதற்கான அட்டைகள் போன்றவற்றுடன் எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைகளும் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் வழங்குவதற்கு நீக்கல் அல்லது அட்டையில்லாத சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற வழிமுறை பின்பற்றப்படுகிறது. விண்ணப்பித்த 60 நாள்களுக்குள் ரேஷன் அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்தப் பொருளும் வேண்டாதவர்கள்: ரேஷன் கடைகளில் எந்தப் பொருளையும் விரும்பாமல் அட்டை மட்டுமே வேண்டுமெனக் கூறி சிலர் விண்ணப்பிக்கின்றனர். அவர்கள், தாங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கான ஆதாரத்தை அளித்தால் அதன் அடிப்படையில் 15 நாளில் துரிதமாக விரைவு முறையில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். இதற்கென வடிவமைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அவர்கள் வசிக்கும் இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அல்லது உதவி ஆணையாளர் அலுவலகத்தில் மனுவினைக் கொடுக்க வேண்டும். அது, பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு ரேஷன் அட்டைகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ரேஷன் அட்டைக்கான கணக்கெடுப்பு, ரேஷன் அட்டை அச்சடிப்பு, நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஒதுக்கீடு செய்தல், கிடங்குகளில் இருந்து பொருள்களின் நகர்வு, ரேஷன் கடைகளில் இருப்பின் அளவு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். இதற்கு வசதியாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ், இணைக்கப்பட்டுள்ள அனைத்துத் துறைகள், நிறுவனங்கள் ஆகியவற்றை இணைத்து பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைந்த தீர்வு முறை நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தில் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப நபர்களின் கைவிரல் ரேகை மற்றும் கண் விழித் திரை ஆகியவற்றை பதிவு செய்து அதன் அடிப்படையில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளன என்று தனது அறிவிப்பில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
downlaod this page as pdf