உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

திறந்தநிலைப் பல்கலை. பட்டம் பெற்றவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய ஆணை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு


 
 
                 சட்டக் கல்வி விதிமுறைகள் (2008) அமலுக்கு வருவதற்கு முன்பாக திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, பி.எல். முடித்தவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யவேண்டும் என்று பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பு, 3 ஆண்டுகள் இளங்கலைப் படிப்பை முடிக்காமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக முதுகலைப் பட்டம் (எம்.ஏ.) பெறலாம். நேரடியாக எம்.ஏ. பட்டம் மற்றும் பி.எல். முடித்து வழக்கறிஞர்களாக உள்ளவர்களின் பதிவை நீக்க இந்திய பார் கவுன்சில் 2009-ம் ஆண்டு முடிவெடுத்தது. 
 
                 இதுதொடர்பாக, சட்டக் கல்வி விதிமுறைகள் 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது.  இந்தப் புதிய விதிமுறைகளால், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் தங்களது பதிவை இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பட்டம் பெற்று, சட்டப் படிப்பு முடித்த சில வழக்கறிஞர்களின் பதிவை நீக்கி தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கறிஞராகப் பதிவு செய்யக் கோரி தாங்கள் அளித்த விண்ணப்பத்தை ஏற்கக் கோரியும் சக்தி ராணி உள்ளிட்ட 75 பேர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். நீதிபதி ஆர்.பானுமதி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் சட்டப் படிப்பில் (பி.எல்.) சேர அனுமதிக்கக் கூடாது என்று என்றும் சட்டக் கல்வி விதிமுறைகள் (2008) வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விதிமுறைகளை வகுக்க அகில இந்திய பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது.அதுபோன்று பட்டம் பெற்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய முடியாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சட்டப்படி மறுக்கலாம். 
 
                       ஆனால்,  இந்த சட்டக் கல்வி விதிமுறைகள் 2009-ல் அமல்படுத்துவதற்கு முன்பாக,  திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடிப் பட்டம் மற்றும் பி.எல். பட்டம் முடித்தவர்களுக்கு இவை பொருந்தாது.எனவே, இதுபோன்ற வழக்கறிஞர்களின் பதிவை நீக்கி பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சட்டக் கல்வி விதிகள் அமலுக்கு வருவதற்கு இதே முறையில் பி.எல். முடித்தவர்களை, வழக்கறிஞர்களாகப் புதிதாகப் பதிவு செய்யலாம். 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பு, 3 ஆண்டுகள் இளங்கலைப் பட்டப் படிப்பு முடிக்காமல் நேரடியாக எம்.ஏ. பட்டம் பெற்றவர்களை சட்டக் கல்வியில் சேர்க்கக் கூடாது. இதுதொடர்பாக, அனைத்து சட்டப் பல்கலைக்கழகங்களுக்கும்,  மாநில பார் கவுன்சில்களுக்கும் அகில இந்திய பார் கவுன்சில் தெரியப்படுத்த வேண்டும். இத் தீர்ப்பின் அடிப்படையிலேயே, திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பட்டத்துடன் பி.எல். முடித்தவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.   

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior