உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

பள்ளிகளில் யோகா, தியான வகுப்புகளை தொடங்க வேண்டும்: பாமக கோரிக்கை





 
                பள்ளிகளில் நீதிபோதனை, யோகா, தியான வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி கோரிக்கை விடுத்தார். 
 
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:
 
                  கல்வி இப்போது வணிக மயமாகி வருகிறது. மாநில கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு வாரியங்களை ஓருங்கிணைத்து பொதுக்கல்வி வாரியம் அமைப்பதால் மட்டுமே கல்வி முறையில் மாற்றம் வந்துவிடாது.தேர்வு முறை, கற்பிக்கும் முறை, மொழி ஆகியவை ஒன்றாக இருந்தால் மட்டுமே சமச்சீர் கல்வி சாத்தியமாகும். பயிற்றுமொழியை தேர்வு செய்யும் உரிமையை அந்தந்த பள்ளிகளுக்கு வழங்காமல் அரசே முடிவெடுக்க வேண்டும்.தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களும் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் திறன் பெறும் வகையில் பயிற்சி கொடுக்க வேண்டும்.​ 53,000 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனை உடனே தொடங்க வேண்டும். பள்ளிகளில் நீதிபோதனை, யோகா, தியான வகுப்புகளைத் தொடங்க வேண்டும்.
 
                      உடற்கல்வியை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும். அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் பள்ளிகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிற்படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்.மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.400 நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. அதனை உடனே நிரப்ப வேண்டும். கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும். செம்மொழியான தமிழின் பெருமைகளை மாணவர்கள் அறியும் வகையில் அனைத்து வகுப்புகளிலும் செம்மொழி தமிழ் என்ற பாடத்தை வைக்க வேண்டும்.மேட்டூரில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்றார் ஜி.கே. மணி.
 
மாரிமுத்து (மார்க்சிஸ்ட்): 
 
                   தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான செலவை அரசே ஏற்கலாம். தனியார் பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகளை குறிப்பாக பெற்றோர்களுக்கு தேர்வு நடத்துவது, அதிக கட்டணம் ஆகியவற்றை தடுக்க வேண்டும். சமச்சீர் கல்வி என்பது வரவேற்கக் கூடியது. ஆனால் அதற்கான நிதி ஆதாரம் குறித்து எதுவும் கூறப்படவில்லை. மாநிலக் கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய 4 வாரியங்களை இணைத்து பொதுக்கல்வி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கெனவே 4 வாரியங்களையும் மூடுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. பள்ளிக் கல்வி முழுவதையும் ஒரே இயக்ககத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். மெட்ரிக் கல்வி வாரியம் தொடர அனுமதிக்கக் கூடாது. தமிழாசிரியர் இல்லாத பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும். மழலையர் பள்ளிகளை உடனே தொடங்க வேண்டும் என்றார்.
 
குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்): 
 
              தாய்மொழிக் கல்வியை ஏளனமாக பார்க்கும் நிலை உள்ளது. அதனை மாற்ற வேண்டும். அதுபோல, ஆங்கிலம் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மாயையை உடைத்தெறிய வேண்டும். தனியார் பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களைய வேண்டும். மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா மற்றும் மாதிரிப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைப் போல மாநில அரசின் பள்ளிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior