தமிழகத்தில் 2010-2011 ஆம் கல்வியாண்டில், பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் புதியதாக மொத்தம் 8,903 ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மேற்கண்ட பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதவிமூப்பின் அடிப்படையில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
2010-2011 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள 8,903 ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.
புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் துவக்கம்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டக் கல்வி அலுவலகம் புதிதாகத் துவக்கப்படும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் புதிதாக துவக்கப்படும். தற்போது அரியலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகமாகச் செயல்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் தொடக்கப்படும். தமிழ்நாடு கல்வி மேலாண்மை மற்றும் பயிற்சிக் கட்டடத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு கூடுதலாக ரூ.92 லட்சம் செலவில் இரண்டாவது தளம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
downlaod this page as pdf