கடலூர் :
நிர்ணயம் செய்த விலையை விட காம்பளக்ஸ் உரம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணி, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் இளங்கோவன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜகோபால் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கடலூர் ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் தட்சணாமூர்த்தி பேசுகையில்
'கடலூரிலிருந்து திருவந்திபுரம், பாலூர், நடுவீரப்பட்டு, பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன் பேட்டை வழியாக புதுப்பாளையம் செல்லும் அரசு பஸ்சால் 20 கிராம மக்கள் பயனடைகின்றனர். பல ஆண்டுகளாக இயக்கப்படும் இந்த பஸ் பழுதடைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இங்கு புது பஸ் விட வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்றார். உடன் 'போக்குவரத்து கழக அதிகாரி உடனடியாக பஸ் சரி செய்யப்படும்' என்றார்.
கார்மாங்குடி வெங்கடேசன் பேசுகையில்
'பெண்ணாடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்காக மாற்று பாதை அமைத்து தர வேண்டும். மழை காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த கம்மாபுரம், விருத்தாசலம் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வில்லை' என்றார்.
மணம் தவிழ்ந்தபுத்தூர் நரசிம்மன்
'பண்ருட்டியில் 'காம் பளக்ஸ்' உரம் நிர்ணயிக்கப்பட்ட 330 ரூபாய்க்கு பதில் 100 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது என்றார். விவசாயி முத்துக்குமரன் 'சிறுகரபம்பலூர் பெருமாள் குட்டையை அகலப்படுத்தும் பணிக்காக ஆய்வு செய்த அதிகாரிகள் 6.71 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு அளித்தனர். ஆனால் இதுவரை பெருமாள் குட்டையை அகலப்படுத்தவில்லை. நாளுக்கு நாள் திட்ட மதிப்பீடுதான் அதிகரித்து வருகிறது என்றார். உடன் டி.ஆர்.ஓ., 'அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது' என்றார்.
பாசிமுத்தான் ஓடை விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் '
பருவம் தவறி மழை பெய்ததால் உளுந்து உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட உளுந்து பயிர் தற்போது 70 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பயிர் செய்யப்பட் டுள்ளது. எனவே உளுந்து சாகுபடியை அரசு ஊக்குவிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் ரவிச்சந்திரன் '
தொடர் மின் வெட்டு காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. மும் முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்திற்கு சிறப்பு அனுமதி பெற்று விவசாயத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்' என்றார். விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் முடிந்த பின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு மின் வெட்டை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.