நெய்வேலி:
ஜெயலலிதா வருகையையொட்டி நெய்வேலியில் தனியார் ஓட்டல்கள் மற்றும் என்.எல்.சி.யின் விருந்தினர் இல்லங்கள் கட்சிக்காரர்களால் நிரப்பப்பட்டு விட்டதால் திருமண நிகழ்ச்சிக்காக நெய்வேலி வருவோர் தங்க இடமின்றி தனியார் விடுதிகளை நாடுகின்றனர். நெய்வேலி வாட்டர் டேங்க் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் முழுவுருவ வெண்கலச் சிலையை திறந்து வைக்க அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல். 18) நெய்வேலி வருகிறார். இச் சிலையை திறந்துவைத்தப் பின் நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள அண்ணா திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகத்தில் நடைபெறும் மின்வெட்டை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்விரு நிகழ்ச்சிகளுக்காக நெய்வேலி வரும் ஜெயலலிதாவை வரவேற்க முன்னாள் அமைச்சர்கள் நெய்வேலியில் முகாமிட்டு பணிகளை கவனித்து வருகின்றனர். அதிமுக கடலூர் மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலர் சொரத்தூர் ராஜேந்திரன் ஆகிய இருவரும் போட்டிப் போட்டிக் கொண்டு ராட்சத வடிவில் கட்-அவுட் அமைத்து வருகின்றனர். இதனால் நெய்வேலி நகர் முழுவதும் கட்-அவுட்களால் நிரம்பி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் 9 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள், 50 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கு என்எல்சியின் விருந்தினர் இல்லங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர கட்சியின் அனைத்து மாவட்டச் செயலர்கள் நெய்வேலி வருகை தரவுள்ளனர். இவர்களுக்காக நெய்வேலி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் இருக்கும் லாட்ஜ்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினமே பாமகவைச் சேர்ந்த விருத்தாசலம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கோவிந்தசாமியின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால், பாமக எம்.எல்.ஏ.க்கள் என்எல்சி விருந்தினர் மாளிகையில் அறை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதுதவிர ஜெயலலிதா பாதுகாப்புக்கு வரும் போலீஸ் அதிகாரிகளுக்கும் என்எல்சி விருந்தினர் மாளிகையில் அறை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனால் என்எல்சி நிர்வாகம் யாருக்கு அறை கொடுப்பது எனத் தெரியாமல் திணறிவருகிறது. நெய்வேலி இந்திரா நகரில் உள்ள லாட்ஜ்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் முகூர்த்த நிகழ்ச்சிக்காக நெய்வேலி வருவோரும் தங்க இடமின்றி அல்லல்படுகின்றனர்.
downlaod this page as pdf