உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

பண்ருட்டியில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்

பண்ருட்டி:

                  பண்ருட்டி காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகரப் பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் தொடருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த 25 நாள்களில் 5 வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் உள்ளவர்களை ஆயுதங்களால் தாக்கி 34 சவரன் நகைகள், ரூ.16 ஆயிரம் ரொக்கம், இரு செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் விழித்திருக்கும்போதே கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து அங்கு இருப்பவர்களை ஆயுதங்களால் தாக்கி கொள்ளையடித்து செல்லும் அளவுக்கு தைரியம் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் 18-ம் தேதி விழமங்கலம் ராமன் தெருவில் வசித்து வரும் திமுக பிரமுகர் செüந்தரராஜன் (40) வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் 4 பேர், தூங்கிக் கொண்டிருந்த அவரது தாய் காசியம்மாளை தாக்கி 2 சவரன் செயினையும், மனைவி மகேஸ்வரியை தாக்கி 7 சவரன் தாலி மற்றும் செயின்களை பறித்துச் சென்றுள்ளனர். 

             இச் சம்பவத்தின் போது கொள்ளையர்கள் தாக்கியதில் செüந்தரராஜனுக்கும், அவரது மனைவி மகேஸ்வரிக்கும் கையில் எலும்பு முறிவு எற்பட்டது. அதேநாளில் சென்னை சாலை ரெட்டியார் காலனியில் வசிக்கும் பூச்சி மருந்து வியாபாரி பழனிச்சாமி வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள், பழனிச்சாமி அணிந்திருந்த 2 சவரன் செயினையும், அவரது மனைவி லதா அணிந்திருந்த 2 சவரன் தாலியையும் பறித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து மார்ச் 29-ம் தேதி பங்களா தெருவில் வசிக்கும் தமிழரசி (55) தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்த போது வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து  4 சவரன் நகை, 200 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். அதே நாளில் சென்னை சாலையில் உள்ள முத்தையா நகரில் வசிக்கும் தலைமை ஆசிரியை பி.தேன்மொழி வெளியூர் சென்று வந்து பார்த்தபோது, வீட்டின் கதவும், பீரோவும் உடைக்கப்பட்டு, 4 சவரன் நகையும், ரூ. 15,000 ரொக்கமும் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

                   இந்நிலையில் ஏப்ரல் 13-ம் தேதி இரவு 8 மணி அளவில் பக்கிரிப்பாளையம் விவசாயி அப்துல்கரீம் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது மனைவி ரமீஜாபீவி, மருமகள் ரஜீயாபேகம் ஆகியோரை கத்தியால் தாக்கியும், கழுத்தை நெரித்தும், இஸ்மாயில் (7), பாத்திமாபீவி (10), பிதோஸ் (3) ஆகிய மூன்று குழந்தைகளை கட்டிப் போட்டுவிட்டு 16 சவரன் நகைகளையும், இரு செல்போன்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக இதுநாள் வரை குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை. கடந்த ஓரிரு மாதத்துக்கு முன் காவல் நிலையத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபரும் இதுநாள் வரை கைது செய்யப்படவில்லை. காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களின் பொருள்களுக்கே இந்நிலை என்றால் பொது மக்களின் உடைமைகளுக்கான பாதுகாப்பு குறித்து கேட்கவே வேண்டாம்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior