நெய்வேலி:
என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இம்மாதம் 20-ம் தேதியும் நிறைவடைவதால், புதிய ஒப்பந்தம் ஏற்பட மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது. மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் 5 ஆயிரம் பொறியாளர்கள் உள்பட 19 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் பொறியாளர் போக எஞ்சிய 14 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளித் தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த இரு மாதங்களாக பேச்சு நடத்தி வருகின்றனர். இப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், பேச்சு விவரங்களை அதில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் பெயரைக் குறிப்பிடாமல் துண்டுப் பிரசுரம் ஒன்றை விநியோகித்துள்ளார்.
இதனால் தொழிலாளர்கள் மத்தியில் சலசலப்பு உருவானது. இந்நிலையில் தொமுச நிர்வாகக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பேச்சு விவரங்களை கேட்டறிந்த சங்கத்தின் 2-ம் நிலை நிர்வாகிகள், என்எல்சி நிர்ணயித்த ஊதிய உயர்வு சதவீதத்தை ஏற்க மறுத்துனர். பின்னர் அடிப்படை சம்பளத்தில் 30 முதல் 35 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட தொமுச தலைமை நிர்வாகிகள், புதிய சதவீதத்தின் அடிப்படையில் பேச்சு நடத்துவது எனவும், நிர்வாகம் பணிய மறுத்தால் போராட்ட நடவடிக்கையில் இறங்குவது எனவும் முடிவு செய்துள்ளனர்.÷மற்றொரு சங்கமாக பாட்டாளித் தொழிற்சங்கம், தொமுச நிர்ணயித்த ஊதிய உயர்வு கோரிக்கையை காட்டிலும் கூடுதலாக 1 சதவீதம் கேட்டு அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என முடிவுசெய்யதுள்ளது. இந்நிலையில் தொமுச சட்டவிதிகளின்படி தற்போதய நிர்வாகிகளின் பதவிக்காலம் இம் மாதம் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் இப்போதைய நிர்வாகிகள் நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தவேண்டுமெனில் தொமுச பேரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு தொமுச பேரவை ஒப்புதல் அளிக்குமா அல்லது ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்திய பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அனுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் எப்போது தேர்தல் நடத்துவது, எங்களுக்கு எப்போது புதிய ஊதியம் கிடைப்பது என்று தொழிலாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
downlaod this page as pdf