எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 16) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி, புதிதாகத் திறக்கப்பட உள்ள விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.மொத்தம் 20,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.ஒரே விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பில் சேர வழக்கம் போல ஒரே விண்ணப்பம் வழங்கப்படும். சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும். கட்டணம் ரூ.500-க்கு டி.டி. அளித்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆதிதிராவிட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.மே 31 கடைசி: விண்ணப்ப விநியோகம் மே 31-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர கடைசி நாள் மே 31-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஜூன் 11-ல் ரேங்க் பட்டியல்: எம்.பி.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 11-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். சென்னை கீழ்ப்பாக்கத்தில் முதல் கட்ட கவுன்சலிங் ஜூன் 21-ம் தேதி தொடங்கும்.
எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு கட்-ஆஃப் 197.5
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.5-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.விழுப் புரம்-திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதால், கட்-ஆஃப் 197.75-லிருந்து 197.50-ஆகக் குறைந்துள்ளது. சென்னையில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகள், செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை மற்றும் புதிதாக மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டுள்ள விழுப்புரம்-திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்து 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளதால், பொதுப் பிரிவினருக்கு உரிய 31 சதவீத இடங்கள் 460-லிருந்து 512-ஆக அதிகரித்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய 26.5 சதவீத இடங்கள் 393-லிருந்து 439-ஆக அதிகரித்துள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய முக்கிய பாடங்களில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல மாணவர்கள் அதிக கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதாவது, கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி, கட்-ஆஃப் மதிப்பெண் 197.5 வரை 576 மாணவ-மாணவியர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கு உரிய மொத்த இடங்கள் 512 (31 சதவீதம்) என்பதால், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு 200-க்கு 197.5-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் 200-க்கு 195.75-ஆகவும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் 194.75-ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் 193.5-ஆகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் 189.25-ஆகவும் தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பைச் சேர்ந்தோருக்கு கட்-ஆஃப் 181.5-ஆகவும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு கட்-ஆஃப் 178.75-ஆகவும் இருந்தது. பொதுப் பிரிவினருக்கு உரிய இடங்களில் அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் இடம்பெறுவது வழக்கமாக உள்ளது. மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என தனியாக 26.5 சதவீத இடங்கள், அதாவது மொத்தம் 439 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 195.75 முதல் 194.75 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரேங்க் பட்டியல் வெளியாகும்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டு விடும்.பழைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாமா? எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பழைய பிளஸ் 2 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த 14,321 மாணவர்களில், 533 பேர் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் பழைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக