கடலூர்:
கடலூர் அருகே சாதிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அண்மையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுடன் வந்து, ஆட்சியரிடம் அளித்த மனு:
கடலூர் அருகே நாயக்கர் நத்தம் காலனியைச் சேர்ந்த செஞ்சிவேல், சாதிக் கலவரத்தால் பாதிக்கப்பட்டார். சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை அவர் இழந்துள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.மேலும் இந்தக் காலனியில் சாதிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இதர 8 குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும்.குறிஞ்சிப்பாடி வட்டம் கண்ணாடி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகரில் 12 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா 1985-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு நிலம் ஒப்படைக்கப்படவில்லை. அவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். சிப்காட் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கிடங்கில் அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட உள்ளூர் மக்களுக்கு, சுமைதூக்கும் வேலை வழங்க வேண்டும். சாதிய அடிப்படையில் அங்கு பணி மறுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அங்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.கடலூர் அருகே எம்.பி. அகரம் ஊராட்சி மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குநருக்கு 2007 முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. அரசியல் உள்நோக்குடன் பழிவாங்கும் நடவடிக்கையில் அவர் பாதிக்கப்பட்டு உள்ளார். முறைப்படி பணி நியமனம் செய்யப்பட்ட அவருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக