கடலூர்:
பிளஸ்-2 தேர்வில், கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.சாருமதி, 1200க்கு 1173 மதிப்பெண் பெற்று கடலூர் மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தமிழை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில், கடலூர் மாவட்டத்தில் முதல் மாணவியாக, டி.சாருமதி தேர்வு பெற்றுள்ளார். டி.சாருமதி காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த தண்டபாணி- ரூபாவதி தம்பதியின் மகள். தண்டபாணி காட்டுமன்னார்கோயில் பர்வதராஜகுலம் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
தேர்வு முடிவு குறித்து சாருமதி கூறுகையில்,
பெற்றோர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கம் காரணமாக நான் அதிக மதிப்பெண் பெறமுடிந்தது. மருத்துவம் படித்து ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன் என்றார். தமிழை முதல் பாடமாக் கொண்டு படித்த மாணவர்களில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.பிரியா, கடலூர் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஏ.சாருமதி ஆகியோர் 1171 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தனர்.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.விசாலாட்சி 1170 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார். மேற்கண்ட 4 மாணவிகளும் கடலூர் கல்வி மாவட்டப் பள்ளிகளில் பயின்றவர்கள்.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் எறையூர் அருணை மேல்நிலைப் பள்ளி மாணவி கே.இலக்கியா 1149 மதிப்பெண் பெற்று, முதல் இடத்தையும், ஸ்ரீ முஷ்ணம் டி.வி.சி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.ராகுல் 1148 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஜாகிரா பேகம் 1133 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பெற்றனர்.
தமிழ் படிக்காதவர்கள்:
தமிழை முதல் பாடமாக தேர்ந்தெடுக்காமல் வேறு மொழிகளைப் பயின்றவர்களில் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.மிதிலா ரேஷ்மி 1180 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளி மாணவிகள் பி.எல்.மோனிஷா 1179 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், ஜே.ஐஸ்வர்யா, 1178 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.
அரசு பள்ளிகள்:
கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் வீரப்பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பி.அன்பழகி 1128 மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றார். விருத்தாசலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.ராஜேஸ்வரி 1124 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். அழகம்மை 1106 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பெற்றனர்.
அரசு உதவிபெறும் பள்ளிகள்:
கடலூர் மாவட்ட அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் எறையூர் அருணை மேல்நிலைப் பள்ளி மாணவி கே.இலக்கியா 1149 மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.நெய்வேலி என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.ரேணுமகேஸ்வரி,சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம். மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.வசந்தி, ஸ்ரீ முஷ்ணம் டி.வி.சி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.ராகுல் ஆகியோர் 1148 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தைப் பெற்றனர்.
பண்ருட்டி சுப்பராயச் செட்டியார் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.நித்யா, 1138 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும், கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.திருமகள் 1137 மதிப்பெண் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தனர்.
மெட்ரிக் பள்ளிகள்:
கடலூர் மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவி மிதிலா ரேஷ்மி 1180 மதிப்பெண் பெற்று, முதல் இடத்தையும், அதே பள்ளி மாணவிகள் மோனிஷா 1179 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், ஜே.ஐஸ்வர்யா 1178 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பெற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக