விருத்தாசலம்:
பிளஸ்-2 தேர்வில் விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி 1,124 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவர்களுள் கடலூர் மாவட்ட அளவில் 2-ம் இடத்தையும், விருத்தாச்சலம் கல்வி மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார். ராஜேஸ்வரி விருத்தாசலம் லூக்காஸ் தெருவைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராஜேந்திரன். சித்த மருத்துவம் செய்து வருகிறார். அம்மா வளர்மதி.
தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ராஜேஸ்வரி கூறுகையில்
எனது பெற்றோர்களின் ஊக்குவிப்பாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலுமே நான் இந்த மதிப்பெண் எடுக்க காரணம். பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து தேர்வுகளை வைத்து எங்களுக்கு அனைத்து விதமான சந்தேகங்களையும் போக்கினர். நான் பத்தாம் வகுப்பு படித்த போது அதில் 474 மதிப்பெண்கள் எடுத்தேன். அப்போது என் உறவினர்கள், இனி அரசுப் பள்ளியில் படிக்க வேண்டாம். அங்கு கல்வித் தரம் சரியாக இருக்காது என்று தெரிவித்தனர். ஆனால், எனது அப்பா எந்தப் பள்ளியில் படித்தாலும் சாதிக்கலாம் என எனக்கு கொடுத்த ஊக்கத்தினால் நான் அரசுப் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் எடுத்திருக்கின்றேன். நான் மருத்துவம் படிக்க விரும்பினேன். ஆனால், கட் ஆஃப் மார்க் இல்லாததால் மருத்துவம் கிடைக்காது. இருப்பினும் பொறியியல் துறையில் சிறந்து விளங்குவேன் என்றார் அவர்.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதலிடம்:
இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இலக்கியா என்கிற மாணவி 1149 மதிப்பெண்கள் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார். இவரது தந்தை கொளஞ்சிநாதன் ஆவார். பெண்ணாடத்தை அடுத்த திருமலை கிராமத்தைச் சேர்ந்த இலக்கியா கூறுகையில், எங்கள் குடும்பத்தில் நான்தான் முதன்முதலில் கல்லூரிக்குச் செல்ல போகின்றேன். எனக்கு மருத்துவம் படிக்க விருப்பம் என்றார். என்னை அதிகாலையிலேயே எழுப்பி விடும் எனது பெற்றோர்களும், எனக்கு நல்ல முறையில் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும் நான் அதிக மதிப்பெண் எடுக்க துணை புரிந்தனர் என்றார் இலக்கியா. விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ பள்ளி மாணவர் ராகுல் 1148 மதிப்பெண்கள் கல்வி மாவட்டத்தில் 2-ம் இடம் பெற்றுள்ளார். இவர், சிறந்த கப்பல் பொறியாளராக இருந்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என தெரிவித்தார். விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜாகிரா பேகம் 1133 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பெற்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக