
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நீண்டதூரம் வைக்கப்பட்டுள்ள சினிமா விளம்பர டிஜிட்டல் பேனர்கள்.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் முக்கிய சாலையில் வைக்கப்பட்டுள்ள சினிமா பேனர்களால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.அரசியல் நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள், திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகள், புதிய திரைப்படங்கள் வெளியீடு என அனைத்துக்கும் டிஜிட்டல் பேனர் வைப்பது தற்போது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படம் அண்மையில் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. விருத்தாசலத்தில் அப்படம் வெளியான திரையரங்கத்துக்கு முன் சாலையின் இரண்டு புறங்களிலும் சுமார் 200 அடி நீளத்துக்கு டிஜிட்டல் பேனர்கள் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ளது.பஸ் நிலையத்தின் அருகில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது. மேலும் அது நகரத்தின் முக்கிய சாலை ஆகும். இச் சாலையின் ஓரத்தில் இரண்டு பக்கங்களிலும் பேனர்களை கட்டுவதற்கு கழிகளால் சாரம் போன்று அமைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்வோர், கழிகள் வரிசையாக நடப்பட்டுள்ளதால் தங்கள் வாகனங்களை கடையின் அருகில் நிறுத்த முடியாமல் சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனர். இதனால் அப் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியில் கடை வைத்துள்ள ஒருவர் கூறியது :
கடையை மறைத்து வைக்கப்பட்டுள்ள பேனர்களால் கடந்த ஐந்து நாள்களாக வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடையை அடையாளங் காண முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.படம் வெளியிடப்பட்டு 5 நாள்களுக்கு மேலாகியும் பேனர்கள் அகற்றப்படவில்லை. இவர்கள் முறையாக அனுமதிபெற்று பேனர் வைத்துள்ளார்களா என்றும் தெரியவில்லை. ஒவ்வொரு ரசிகர் மன்றத்தினரும் இவ்வாறு பேனர்கள் வைக்கத் தொடங்கினால் இச் சாலையில் எப்போதும் பேனர்கள் இருந்துகொண்டே இருக்கும். இதனால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதோடு, நிரந்தரப் போக்குவரத்து பிரச்னையும் ஏற்படும் என்றார்.தமிழகத்தில் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைக்க விதிமுறைகள் உள்ளன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது, காவல்துறையினரிடம் முன்அனுமதி பெறு வேண்டும், நிகழ்ச்சி முடிந்த ஓரிரு நாள்களில் அவற்றை அகற்ற வேண்டும் என்றெல்லாம் விதிகள் உள்ளன. ஆனால் இந்த விதிகளை அமல்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகமோ, காவல் துறையோ அக்கறை செலுத்துவதில்லை என்பதே உண்மை.
அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.
நிர்வாக குழு,
தகவல் வலைப்பூக்கள்.....