வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி வரும் ஜூலை முதல் தேதி துவங்குகிறது. பெயர்களை சேர்க்க, நீக்க 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,'' என்று நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியதாவது:
இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஜூலை முதல் தேதி துவங்குகிறது. அன்றே, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பெயர்களை சேர்க்க, நீக்க, மாற்றம் செய்ய ஜூலை 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான சிறப்பு முகாம்கள், ஜூலை 10 மற்றும் 11ம் தேதி சனி, ஞாயிறு கிழமைகளில் நடக்கும். இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 16ம் தேதி வெளியிடப்படும்.
ஏற்கனவே உள்ள ஓட்டுச்சாவடி மையங்கள் மட்டுமன்றி, தபால் அலுவலகங்களிலும், படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து அளிக்கலாம். மொத்தமாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. தபால் அலுவலகங்களில், சிறப்பு முகாம் நாட்களிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை தபால் துறை செய்துள்ளது.ஏற்கனவே நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில்,100 சதவீத கள ஆய்வு முடிந்துள்ளது. இப்பணி கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கி, தற்போது முடிந்துள்ளது. பெயர்களை சேர்க்க மொத்தம் 47 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 31 லட்சம் வாக்காளர்கள் ஏற்கப்பட்டு, பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 16 லட்சம் பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சில மாவட்டங்களில் சிலரது பெயர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும். தற்போது நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, இவர்களது விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும்.கடந்த லோக்சபா தேர்தலின் போது தமிழகத்தில் மொத்தம் நான்கு கோடியே 16 லட்சம் வாக்காளர் இருந்தனர். தற்போது மேலும் 14 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். ஆண்களும், பெண்களும் சம அளவில் உள்ளனர்.இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக