உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: அரசாணை பிறப்பிக்காததால் மாணவர்கள் பாதிப்பு


சிதம்பரம்:
 
                 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
         நீதிமன்ற உத்தரவின்படி தமிழகஅரசு அரசாணை பிறப்பிக்காததால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஆண்டு 6,7,8,9 வகுப்புகளில் 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் மாதம் உடனடித்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண் பட்டியல்கள் அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 8-ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவினால், அதற்கான தமிழக அரசின் ஆணையை எதிர்பார்த்து கல்வித்துறை அதிகாரிகள் இன்று வரை இந்த மதிப்பெண் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளனர்.இதனால் ஜூன் மாதம் நடைபெற்ற உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளி திறந்து ஒரு மாதமாகியும் கடந்த ஆண்டு படித்த வகுப்பிலேயே பயிலும் நிலை உருவாகியுள்ளது. இதில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு பொருந்தாது என்றாலும் அவர்களின் தேர்ச்சி பட்டியலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் பிற வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலுடன் இணைக்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 
 
                   கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்காததால் 9-ம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வுக்கான 10-ம் வகுப்பு பாடங்களை படிக்க முடியாமல் 9-ம் வகுப்பில் பயின்று வருகின்றனர்.மேலும் இம் மாணவர்களுக்கு அரசின் இலவசப் புத்தகங்களும் வழங்கப்படவில்லை. எனவே தமிழகஅரசு நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் அல்லது தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் பட்டியல்களில் கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாகும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior