கடலூர்:
துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் கடலூரில், துப்புரவுத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தது. துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு துப்புரவுத் தொழிலாளர் மேம்பாட்டு ஆணையத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆணையத்தின் செயலர் தீதன், பிரிவுச் செயலர் ராஜேஷ்குமார் ஆகியோர் புதன்கிழமை கடலூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.
இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். பின்னர் ராஜேஷ்குமார் கூறியது:
துப்புரவுத் தொழிலாளர் புனர்வாழ்வுத் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் சுயதொழில் கடன் உதவிகளைப் பெற்று, நல்ல முறையில் தொழில் செய்து வருகிறார்கள். சுற்றுப் பயணத்தில் துப்பரவுத் தொழிலாளர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டோம். துப்புரவுத் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளைத் தூய்மையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளை நன்கு படிக்கவைக்க வேண்டும்.
அவர்களின் படிப்புக்காக மத்திய அரசு பல கோடி நிதி வழங்குகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்றும் ராஜேஷ்குமார் தெரிவித்தார். இக்கூட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் 11 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 17,800 வழங்கப்பட்டது. துப்புரவுத் தொழிலாளர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் ஆணையத்தினர் பெற்றுக் கொண்டனர். துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயில கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும், குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தாட்கோ மேலாளர் துளசிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக