உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

கல்விக் கடனை வசூலிக்க புதிய திட்டம்


        கல்விக் கடனை வசூலிக்க வங்கி நிர்வாகம் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.மாணவரின் பட்டத்துக்கான சான்றிதழில் "பார் கோட்' போன்ற முத்திரை பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
                எனவே, மாணவர் வேலைக்கு சேர்ந்துவிட்டதை வங்கிகள் இனி அறிந்து கொள்ள முடியும். இதனால் கடன் வசூலும் எளிதாகிவிடும் என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே, கல்விக் கடனுக்கு வட்டியை மத்திய அரசே ஏற்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வங்கிக் கடன் வாங்கிப் படிப்பவர்களில் சிலர், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் போய் விடுவதால் சிக்கல் ஏற்படுவதாக வங்கி அதிகாரிகள் கூறிவந்தனர். புதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டால், மாணவர் வேலை பார்க்கும் நிறுவனம் மூலமாகவே கடனை வசூல் செய்வதற்கான நடைமுறைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
               கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசே செலுத்துவது தொடர்பாக கடந்த ஆண்டில் அறிவிப்பு வெளியானது. இருந்தபோதிலும் இது தொடர்பான ஆணை எதுவும் வரவில்லை என்று கூறி, வட்டிச் சலுகையை அளிக்க வங்கி அதிகாரிகள் மறுத்து வந்தனர்.அ டுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கவுள்ள சூழ்நிலையில், இதுகுறித்த சுற்றறிக்கையை இந்திய வங்கிகள் சங்கம், எல்லா வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது.குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அந்த மாணவர் அல்லது மாணவிக்கு வட்டிச் சலுகை கிடைக்கும். பிளஸ் 2 முடித்த பிறகு, மேற்கொள்ளும் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப, தொழிற் கல்விக்கு இச் சலுகை வழங்கப்படும்.
 
                  நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு மட்டும் இது கிடைக்கும்.பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தினர் எவரும் இச் சலுகையைப் பெறலாம். குடும்ப வருமானம் மட்டுமே அடிப்படையாகக் கருதப்படும், சமூக பின்னணி எதுவும் கருத்தில் கொள்ளப்படாது. மாணவரின் படிப்பு காலம் முடிந்து ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டு வரையிலான (இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை) வட்டியை மத்திய அரசே செலுத்தும். அதற்குப் பிந்தைய காலத்துக்கு மாணவர்தான் வட்டியைச் செலுத்த வேண்டும். 
 
                   தகுதியுடைய மாணவருக்கு ஒரு முறை மட்டுமே, அதாவது இளநிலைப் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் அல்லது பட்டயத்துக்கான (டிப்ளமோ) கல்விக்கு மட்டுமே வட்டி வழங்கப்படும். இருந்தாலும், ஒருங்கிணைந்த பட்டத்துக்கான (இளநிலையும், முதுநிலையும் சேர்ந்தது) கல்விக்கும் கடனுக்கு வட்டியை அரசே ஏற்கும்.படிப்பை பாதியில் நிறுத்தினாலோ அல்லது கல்வி நிலையத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை அல்லது கல்வி காரணங்களுக்காக நீக்கப்பட்டாலோ வட்டி மானியம் கிடைக்காது. இருந்தாலும் மருத்துவ காரணங்களுக்காக கல்வியைத் தொடர முடியாமல் போனால் அதற்கு வட்டி மானியம் உண்டு. அதற்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
 
 
              என்.எம்.டி.எப்.சி., என்.எஸ்.கே.எப்.டி.சி., என்.பி.சி.எப்.டி.சி., என்.எஸ்.சி.எப்.டி.சி. மற்றும் என்.எச்.எப்.டி.சி. ஆகிய அமைப்புகளும் அவற்றின் நோக்கத்தின் அடிப்படையில் கல்விக் கடன்களை வழங்கி வருகின்றன. இந்தக் கடன்களுக்கும் வட்டி மானியத் திட்டம் பொருந்தும்.2009 ஏப்ரல் 1-ம் தேதியில் தொடங்கிய 2009-2010 கல்வி ஆண்டில் இருந்து இத் திட்டம் செயல்படுத்தப்படும். அந்த தேதிக்குப் பிறகு பெறப்பட்ட கல்விக் கடன்களுக்கு வட்டி மானியம் அளிக்கப்படும். அதற்கு முன்பாக பெறப்பட்ட கடன்கள் மானியத் திட்டத்துக்கு பரிசீலிக்கப்பட மாட்டாது. இத் திட்டத்தின் மூலமாக ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள் என சமூகத்தில் பல்வேறு பிரிவினரில் பலன் அடைந்தவர்கள் குறித்து கண்காணிக்க மனிதவள மேம்பாட்டுத் துறை ஓர் அமைப்பை ஏற்படுத்தும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior