உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டத்துக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு


கடலூர்:

              மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யலாம் என்று முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது:

                 மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு, சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா ரூ.5 லட்சம் ஒதுக்கலாம் என்று முதல் அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கிடைக்கும் ரூ.45 லட்சம் செலவிடப்படும். 

                கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் ஆதிதிராவிடர்கள் 50 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது 22 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. இனி ஒவ்வொரு வாரமும் இதேபோல் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றார் ஆட்சியர். மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் 289 மனுக்கள் பெறப்பட்டன. 2 மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் படிக்க தலா ரூ.25 ஆயிரம், கல்லூரியில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் 13 பேருக்கும், வேலைக்குச் செல்லும் மாற்றுத் திறனாளிகள் முவருக்குத் தலா ரூ. 35 ஆயிரம் மதிப்பில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள், திருமணம் செய்துகொண்ட மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்குத் தலா ரூ.20 ஆயிரம் உதவித் தொகை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதல்வருக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும், கடலூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கம் நன்றி தெரிவித்தது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior