பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள சிறுவணிகக் கடையில் ஆய்வு செய்யும் தேசிய துப்புரவு பணியாளர் புனர்வாழ்வு நலவாரியச் செயலர் டி.தீதன் (இடமிருந்து 4-வது).
பண்ருட்டி:
தேசிய துப்புரவுப் பணியாளர் புனர்வாழ்வு நல வாரியத்தின் செயலர் டி.தீதன் பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இந்தியா முழுவதும் உள்ள துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அவர்கள் சிறு வணிகம் செய்யவும், ஆட்டோ வாங்கவும் மத்திய அரசு மானியத்துடன் கடன் வசதி அளித்து வருகிறது. நல வாரியத்தின் செயலர் டி.தீதன், இணைச் செயலர் ராஜேஷ்குமார் ஆகியோர், பண்ருட்டியில் கடன் பெற்ற பயனாளிகளையும் அவர்கள் செய்யும் சிறு வணிகத்தையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் தேசிய துப்புரவுப் பணியாளர் புனர்வாழ்வு நல வாரியத்தின் செயலர் டி.தீதன் கூறியது:
துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தேசிய துப்புரவு பணியாளர் புனர்வாழ்வு நல வாரியத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் கல்வித் தரம் மற்றும் பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலுக்கு தகுந்தாற்போல் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை 50 சதவீதம் மானியத்தில் கடன் வசதி அளிக்கப்படுகிறது. 31 மார்ச் 2010-ம் ஆண்டு வரை அளிக்கப்பட்ட கடன் குறித்து சோதனை மேற்கொண்டு வருகிறோம். சென்னையில் ஆய்வு செய்ததில் கடன் அளித்ததன் நோக்கம் நிறைவேறவில்லை.கடலூர் மாவட்டத்தில் 1264 பயனாளிகளுக்கு ரூ.3.19 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டியில் 96 பயனாளிகளுக்கு ரூ.24.50 லட்சம் கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என டி.தீதன் கூறினார். தாட்கோ கடலூர் மாவட்ட மேலாளர் துளசிதரன் உடன் இருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக