உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

தமிழ் வழி பி.இ. படிப்பு பாடத்திட்டங்கள் வெளியீடு

தமிழ் வழி பி.இ. படிப்புகளுக்கான பாடத் திட்டங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் செவ்வாய்க்கிழமை வெளியிட, பெற்றுக் கொள்கிறார்
   
             தமிழ் வழி பி.இ. படிப்புகளுக்கான பாடத் திட்டங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி. மன்னர் ஜவஹர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். சென்னை, திருச்சி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ் வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன. 
              இதற்கான பாடப் புத்தகங்கள், பாடத் திட்டங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் பணிகள் அண்ணா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட குழு மேற்கொண்டது. அதன்படி, பாடத் திட்டங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பாடத் திட்டங்களை வெளியிட, அதை கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேசியது: பி.இ. படிப்பின் முதலாண்டின் முதல் பருவத்துக்கான பாடப் புத்தகங்களான இயற்பியல், கணிதம், வேதியியல், பொறியியல் கிராபிக்ஸ் ஆகியவற்றுக்கான பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி தற்போது முடிந்துள்ளது. பாடப் புத்தகங்கள் ஆகஸ்ட் 15-க்குள் வெளியிடப்படும். தமிழ் வழியில் பி.இ.படிப்பைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் வழி மாணவர்கள் மிகுந்த பலனைப் பெறுவார்கள். அவர்களின் சிந்தனைத் திறனும் மேம்படும்.  கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறுவதையடுத்து பல்கலைக்கழகத்தில் குறுந்தொலைவு தொடர் ஓட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. பொறியியல் மாணவர்களிடையே திருக்குறளைக் கொண்டுச் செல்லும் வகையில், கிண்டி பொறியியல் கல்லூரியில் (சி.இ.ஜி) டிஸ்ப்ளே மூலம் திருக்குறள் போட்டுக் காண்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.  கிண்டி சி.இ.ஜி., குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள மாணவர்களின் விடுதிகளின் பெயர்கள் மலர்கள், நதிகள் ஆகியவற்றின் பெயரைக் கொண்டதாக மாற்றப்பட உள்ளன. கல்லூரிகளில் உள்ள துறைகளின் பெயர்கள் தற்போது ஆங்கிலத்தில் உள்ளன. இவை தமிழிலும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior