விவாகரத்து நடவடிக்கையை எளிமையாக்கும் விதமாக இந்து திருமணச் சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தவிர ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் சமாதியை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பொறுப்பில் விடப்படும். விவாகரத்து கோரும் போது இழுத்தடிக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு புதிதாக சட்டம் கொண்டுவரும். நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அவற்றின் விவரம்:
தற்போது நடைமுறையில் உள்ள இந்து திருமணச்சட்டம் 1955 மற்றும் திருமண சிறப்பு சட்டம் 1954 ஆகியவற்றின் அடிப்படையில் விவாகரத்து வழக்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து திருமணச்சட்டம் 13ன் கீழ், தற்போதைய சூழ்நிலையில் ஏழு காரணங்களின் அடிப்படையில் விவாகரத்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்தல், பெண்ணை கொடுமைப்படுத்துவது, வேற்று மதத்திற்கு மாற்றம் செய்ய வற்புறுத்துவது, மனநலம் பாதிக்கப்பட்டு புத்தி சுவாதீனமாக இருத்தல், பால்வினை நோய்கள் தாக்கப்பட்டிருப்பது, தொழுநோய் பாதிப்பு, கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் காணாமல்போய் ஏழு ஆண்டுகள் ஆகியிருப்பது உள்ளிட்ட ஏழு காரணங்களுக்காக விவாகரத்து வழங்கப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமல்லாது திருமணச்சட்டம் 13 (பி) பிரிவின் கீழ் இரு தரப்புக்கும் ஒத்துப் போகாமல், பரஸ்பரம் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து அதன் அடிப்படையில் 18 மாதங்கள் வரை தம்பதிகளுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பாக விண்ணப்பம் இருந்தால், அப்போது விவாகரத்து வழங்கப்படுகிறது. இழுத்தடிக்க முடியாது: இந்நிலையில் விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு, இருதரப்பும் இனி இணையவே முடியாது என்ற நிலை உருவாகும்பட்சத்திலும், விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தவர்களில் யாராவது கோர்ட்டுக்கு வராமலேயே இழுதடித்துக் கொண்டிருக்கும் பட்சத்திலும், சம்பந்தப்பட்ட நீதிபதியே முடிவு செய்து விவாகரத்தை வழங்கிட இந்த புதிய சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. இவ்வாறு சட்டத்திருத்தம் செய்வதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியது. மேலும் இந்த சட்டத்திருத்தம் விரைவில் பார்லிமென்டில் வைத்து நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. டில்லியில் உள்ள ராஜ்காட், சாந்திவனம், விஜய்காட், ஷக்தி காட், வீர் பூமி, எக்தாதள், கிஸான் காட், சம்தா ஸ்தல் மற்றும் சங்கார்ஷ் ஸ்தல் ஆகிய இடங்களில் சமாதிகள் உள்ளன. இவற்றோடு சேர்த்து ராஜிவ் சமாதியையும் மத்திய தொழில்பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பது என, 2004ம் ஆண்டே மத்திய அரசு முடிவெடுத்து இருந்தது. இந்நிலையில், ராஜிவ் சமாதியை மத்திய தொழில்பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கும் முடிவுக்கும் இதற்கென ரூ.7.06 கோடி நிதியும் ஒதுக்க நேற்று அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்களுக்கு தங்குமிடம் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் ஆயுதங்கள் வாங்குவது உள்ளிட்ட செலவுகளுக்கு இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. தவிர, வீரர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடியே 23 லட்ச ரூபாய் செலவிடப்படவுள்ளது.
200 கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்:
நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளை ஐ.ஐ.டி., கல்வித் தரத்திற்கு உயர்த்துவதற்காக இரண்டாயிரத்து 430 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கென ஆயிரத்து 395 கோடி ரூபாயை உலக வங்கி வழங்கிடவுள்ளது. இதற்காக ரூ.500 கோடி வரை மத்திய அரசும், ரூ.518 கோடியை மாநில அரசும் செலவுத் தொகையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நாட்டிலுள்ள 18 மாநிலங்களில் மைக்ரோ நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றிட எட்டாயிரத்து 32 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட சில வகை சிக்கன நீர்ப்பாசன முறைகளை கையாண்டு அதன்மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமையவுள்ள இந்த திட்டத்தின் மூலம் சாதாரண விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும், சிறிய விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும். அமைச்சரவையின் முடிவுகளை நிருபர்களிடம் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக