பண்ருட்டி:
துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய 22 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மூன்று மாதமாகியும் மாற்ற முடியாமல் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சுய உதவிக் குழுவினர் பரிதவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் 22 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில் 11 சுய உதவிக் குழுக்களுக்கு, தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் கடன் வழங்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
இதற்கான காசோலையை, கடந்த மார்ச் 6ம் தேதி காட்டுமன்னார்கோவிலில் நடந்த அரசு விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சுய உதவிக்குழு தலைவர்களிடம் வழங்கினார். துணை முதல்வரின் கைகளால் காசோலையை பெற்ற சுய உதவிக்குழு பெண்கள், அதை பணமாக மாற்ற அருகில் உள்ள சித்திரைச்சாவடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பலமுறை நேரடியாக சென்று கேட்கும் போதெல்லாம், "பில்' தயாராகவில்லை எனக் கூறி அலைக்கழித்து வருகின்றனர். துணை முதல்வரால் வழங்கப்பட்ட காசோலை வாங்கி மூன்று மாதங்களாகியும் பணம் கைக்கு கிடைக்காமல் சுய உதவிக்குழு பெண்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சித்திரைச்சாவடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் தனசங்கர் கூறுகையில்,
"துணை முதல்வர் வருகைக்காக உயரதிகாரிகள் உத்தரவுபடி பட்டியல் தயார் செய்யும் முன் உடன் (செக்) பார்மெட் மட்டும் டிஜிட்டல் போர்டு செய்து வழங்கினோம். இதற்கான பணம் வழங்குவதற்கான கோப்புகளை கடலூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு அனுப்பியுள்ளோம். ஓரிரு நாளில் ஒப்புதலாகிவிடும். விரைவில் பணம் வழங்கப்படும்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக